விருதுநகர், ஆக.24- அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளப்பதிவில் படத்துடன் பதிவிட்டுள்ள தகவல் வருமாறு,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில், கார்னீலியன் எனறழைக்கப்படும் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது மோதிரத்தில் பதிப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த இரண்டு கட்ட அகழாய்வில் 15 சூதுபவள கல் மணிகள் கிடைத்தன. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இப்பதக்கம் 10.6 மில்லி மீட்டர் சுற்றளவும் 3.6 மில்லி மீட்டர் தடிமனும் 60 மில்லி கிராம் எடையும் கொண்டது.
இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில் தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பாகும்.
சூதுபவள மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் மகாராட்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் கிடைக்கின்றன. இதுபோன்று கல்மணிகளில் உருவங்கள் குழிவான முறையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம் உரோம் நாட்டில் சிறப்புற்றிருந்தது.
இதுபோன்று கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி(பட்டணம்) அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கீழடியில் காட்டுப்பன்றி உருவமும் முசிறியில் பாயும் சிங்கமும் கிடைக்கப்பெற்றுள்ளன.
கீழடியிலும் முசிறியிலும் கிடைக்கப்பெற்ற சூதுபவள மணியால் ஆன பதக்கங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை. அதேபோன்று வெம்பக்கோட்டையிலும் கிடைத்திருப்பது சிறப்பாகும். -இவ்வாறு அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
குரங்கம்மை நோயின் அறிகுறிகள்
ஜெனீவா, ஆக.24- குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
1958ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய். தற்போது இந்த நோய் உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக மாறி உள்ளது. குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்புளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும்.
குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும்.
தும்மும் போது வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது.
உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில நேரம் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே குரங்கம்மை நோய் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.