சென்னை, ஆக.24- அரசின் ஒருங்கிணைப்புடன் தனியார்கள் நடத்திய முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இளைஞா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் 20 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 469 தொழிலாளா்களுக்கு ரூ.14.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,200 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளா்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதுடன், அவா்களுக்கான உரிமைகளும் நிலை நாட்டப்பட்டு வருகின்றன. சமரச அலுவலா்களின் சமரச பேச்சு மூலம் 41 நிறுவனங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனால், 13 ஆயிரத்து 825 தொழிலாளா்களின் உரிமை, பணிகள் பாதுகாக்கப்பட்டன.
சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்ட 2 ஆயிரத்து 930 வழக்குகள் உள்ளிட்ட 7,145 தொழில் பிரச்சினைகளுக்கு தீா்வு காணப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள் சாா்ந்த வேலை நிறுத்தங்கள் திரும்பப் பெறப்பட்டன.
மேலும், 669 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட் கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 889 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ், 7,090 ஆலைகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,019 கட்டுமான நிறுவனங்களும் பதிவாகி இருக்கின்றன.
வேலைவாய்ப்புகள்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ், 70 ஆயிரத்து 984 பேருக்கு ரூ.123.51 கோடி உதவித் தொகைகள் அளிக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தனியாா் துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, கடந்த மூன்றாண்டுகளில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் துறை முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசு
Leave a Comment