கேள்வி 1: வக்புவாரிய மசோதா, சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் மசோதா, தற்போது “லேட்டரல் என்ட்ரி” போன்ற வற்றை கொண்டு வந்துவிட்டு பிஜேபி அரசு பின் வாங்குகிறதே? பின்வாசல் வழியாக கொண்டுவரும் திட்டமா?
– கே.பத்மா, சிட்லபாக்கம்
பதில் 1: முன்புபோல, அரசியல் பலம் இல்லை பா.ஜ.க. மோடி அரசுக்கு – அது மைனாரிட்டி அரசு. முன்பு போல எதிர்க்கட்சிகள் பலமற்று இருக்கவில்லை; பலத்துடன் உள்ளனர்.
முழு யதேச்சதிகாரம் இப்போது முடியாது; எனவே, பின்வாங்கிய ஒதுங்கல் எனலாம். எனவே, இத்தகைய ‘டர்னிங்’ சீன்களை இந்த நாடகத்தில் வரும் ஆண்டுகளில் மேலும் காண அதிக வாய்ப்புண்டு.
– – – – –
கேள்வி 2: திடீரென தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் வருகை அதிகரித்துள்ளதே?
– ம.முனீஸ்வரன், மதுரை
பதில் 2: ‘திடீரென’ வரவில்லை; முன்பே பற்பல நாடுகளுக்குப் பயணம் – துபாய், சிங்கப்பூர், இப்போது அமெரிக்கா – இங்கேயே பல நாடுகளின் பங்கேற்பு மூலம் முதலீடுகள் – காரணம் பெரியார் மண்ணாகிய நம் தமிழ்நாடு அமைதிப் பூங்கா, முதலீட்டு தொழில் முனைவோருக்கு பல வதிகளுடன் உள்ள மாநிலம் – நிலையான ஆட்சி – நிம்மதி அவர்களுக்கு நல்ல வெகுமதி – எனவே, தேன்கூடு கட்டுவது போல் வருகிறார்கள்! முதலீட்டைத் தருகிறார்கள்!
– – – – –
கேள்வி 3: பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க யோசனை சொல்லாத மோடி, உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்துவாரா?
– வ.கார்த்திகேயன், கீழ்வேளூர்
பதில் 3: பதில் உங்கள் கேள்வியிலேயே அடக்கம்.
– – – – –
கேள்வி 4: நேரடி நியமனத்தை சந்திரபாபு நாயுடு கட்சி ஆதரித்துள்ளதே?
– ப.தினகரன், வடமதுரை
பதில் 4: தனியார் கார்ப்பரேட்களுக்கு எப்போதும் துணையாவார் அவர்; சமூக நீதி குறித்து அதிகம் கற்காதவர் என்பதால் – காலம் அவரை உணர வைக்கும்.
– – – – –
கேள்வி 5: வடமாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி என்பது எவ்வளவு பெரிய செய்தி. ஆனால், அதை ஊடகங்கள் அப்படியே கடந்துவிட்டனவே?
– க.குணசேகரன், செம்பட்டி
பதில் 5: கடந்துவிடவில்லை; மறைத் துள்ளார்கள்! காரணம், பெருங் கார்ப்பரேட் கொள்கையில்தானே ஊடகங்கள் – மோடி அரசுக்கு எதிரான செய்திகள் எல்லாம் அகால மரணம்தான்!
– – – – –
கேள்வி 6: சிறுமிகளைப் பின்தொடர்ந்தாலே ‘போக்சோ’ சட்டம் பாயும் என்று கூறும் அதே மகாராட்டிரா நீதிமன்றம் – 2022ஆம் ஆண்டு சிறுமி உடை மீது மார்புப் பகுதியில் கைவைப்பது தவறில்லை (நாக்பூர் நீதிபதி புஷ்பா கனேடிவாலா 2022) என்று கூறியுள்ளதே? ஏன் இந்த முரண்?
– வெ.விஜயன், உளுந்தூர்பேட்டை
பதில் 6: அய்யய்யோ! சொல்ல வெட்கமாகுதே – புல்லுருவிகள் எங்கும் உண்டு போலிருக்கிறது!
– – – – –
கேள்வி 7: சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில், “சீரோ” விழிப்புணர்வு விளம்பரம் கைகொடுத்துள்ளதே! விளம்பரம் செய்தால்தான் சாலைவிதிகளைப் பின்பற்றுவோம் என்ற மனநிலை நல்லதா?
– ச.தேன்மொழி, உடுமலைப்பேட்டை
பதில் 7: நல்லதில்லைதான்! என்ன செய்வது? இது விளம்பர யுகமாயுள்ளதே! “எல்லாம் வல்ல கடவுள்களுக்கே” விளம்பர வெளிச்சம் தேவைப்படுகிறதே! என் செய்ய?
– – – – –
கேள்வி 8: வழக்கம் போல் மீண்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுப்பு – அதை எதிர்த்து வழக்கு – என்பது தொடர்கதையாகி உள்ளதே? நீதிமன்றங்களின் நேரம் வீணாகாதா?
– வா.முத்து, தூத்துக்குடி
பதில் 8: பல உப்புச்சப்பற்ற வழக்குகள் நீதி மன்றங்களின் – நீதிபதிகளின் மதிப்புமிகு நேரத்தை பாழடிக்கின்ற வேதனை! அவர்களும் முடிந்தவரை தடுக்கவே பார்க்கிறார்கள். முடியவில்லை – அக்கப்போர் வழக்குகளுக்கு அபராதம்கூட போடுகின்றனரே!
– – – – –
பார்ப்பனரை வீட்டின் உள்ளே சமமாக அமர வைப்பார்கள்
சூத்திரனை முற்றத்தில் அமரவைப்பார்கள்
தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை அவர் அமைச்சரே ஆனாலும் கழிப்பறை அருகே அமரவைப்பார்கள்
கேள்வி 9: சங்கராச்சாரியார் முன் – அன்று பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் இன்று பாஜக கட்சி தமிழ்நாட்டுத் தலைவர் என தொடர்ந்து தரையிலேயே உட்காருகிறார்களே? சங்கரமடத்தில் இருக்கைகளுக்குப் பஞ்சமா?
– பா.ஓவியன், அரும்பாக்கம்
பதில் 9: ‘மானம்’ என்றால் அண்ணாந்து பார்க்கும் ஆசாமிகளின் பகுத்தறிவு எவ்வளவு என்பதை புரிந்துகொள்ளட்டும்!
– – – – –
கேள்வி 10: தேர்தல் ஆணையம் மகாராட்டிரா தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்டது ஏன்?
– போ.சிங்கராஜ், மணப்பாறை
பதில் 10: பிரதமர் வசதி பார்த்து, தேர்தல் தேதிகள் – முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தல் 40 நாள்கள் தொடர்ச்சி – இப்போது மட்டும் மாறுமா என்கிறார் நம்ம அலுவலகப் பணித் தோழர்!