நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உள்பட கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக. 23- முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்கள், கலைஞரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (22.8.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

முதன் முதலில் “முரசொலி” என்னும் துண்டு இதழ் வெளி யீட்டை 1942ஆம் ஆண்டு வெளி யிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953ஆல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது. அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார்.

‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018ஆம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கியப் படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர். எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, அய்ந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல், முத்தமிழறிஞர் கலைஞர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *