அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, ஆக.23 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 715 பேருக்கு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளி, மேனாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. கலந்தாய்வில் சிறப்புப் பிரிவு மற்றும் உள் இட ஒதுக்கீட்டில் மொத்தம் 715 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வழக்கமாக மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதமே முடிவுபெற்றிருக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வில் ஏற்பட்ட குழப்பங்கள், குளறுபடிகளின் காரணமாக ஒரு மாதகாலதாமதத்துக்கு பிறகு இந்த மருத்துவக் கலந்தாய்வு தொடங்கி உள்ளது. அதன்படி ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆக.9-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, கடந்த 19-ஆம் தேதி தகுதி படைத்தவர்களுக்கான (மெரிட்) பட்டியல் வெளியிடப்பட்டன.
அதனடிப்படையில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை இணைய வழி வாயிலாக தேர்வு செய்யும் பணி ஆக.21-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவில் விளையாட்டு பிரிவு மாணவர்கள், மேனாள் படைவீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மொத்தம் 715 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த ஆண்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மட்டும் எம்பிபிஎஸ் படிப்புக்கு 496 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 126 இடங்களும் என மொத்தமாக 622 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்த ஆண்டு தான் மருத்துவத்துறை வரலாற்றிலேயே எம்பிபிஎஸ் இடங்களுக்கு அதிகபட்ச எண்ணிக்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் இதன் ஆய்வறிக்கை வெளியிடப்படும். எனவே தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவ சேவையை மக்கள் முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப மருத்துவக் கட்டமைப்பையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.