சென்னை, ஆக 22 தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 18-ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் கலைஞர் நினைவு நாணயம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாணயம் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அதனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
20.8.2024 அன்று ஒரே நாளில் மட்டும் 500 நாணயங்கள் விற்பனை ஆகியுள்ளன.
ரூபாய் 25 கோடியில் சென்னையில் நவீன பூங்கா
சென்னை, ஆக.22- சென்னையில் ரூ.25 கோடியில் நவீன வசதிகளுடன் உருவான பூங்கா வருகிற 26ஆம் தேதி திறக்கப்படுகிறது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலம் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இங்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. பூங்காவில் 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரம் கொண்ட கண்ணாடி மாளிகை அமைக்கும்பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கண்ணாடி மாளிகையில் வண்ண மலர்கள் கொண்ட பசுமை குடில் அமைக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவிலே முதன்முறையாக 105 அடி உயரத்தில் சூப்பர் ட்ரீ கோபுரம் 10 மாடிகளுடன் அமைய உள்ளது. கோபுரத்தின் மேல் 40 மீட்டர் சுற்றளவில் 100 பேர் நின்று பூங்காவை பார்க்கும் வசதிகள் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி திறப்பு
பசுமை நடைபாதை, ரோப் கார் வசதி, அலங்கார கொடி அமைப்பு மற்றும் மலர்களை கொண்ட குகை, கலைஞரின் சாதனைகளை விளக்கும் நுழைவு பலகைகள், சிறப்பு நுழைவு வாயில் வளைவு, அழகுசெடிகள், கொடிகள், நறுமணப் பயிர்கள், புல் தரை, மூங்கில் தோட்டம் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி இந்த பூங்கா உருவாகி வருகிறது.
தற்போது பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. நீர்வீழ்ச்சிகள், நடைபாதைகள், பூஞ்சோலைகள், புல்வெளிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதற்கிடையே, பூங்காவின் ஒரு பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி திறந்துவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையொட்டி பூங்கா பணிகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து, பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். இந்த பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.