காட்பாடி, ஆக. 21- ‘சமஸ்கிருதம் செத்துப் போன மொழி. அதைப் பேசவே முடியாது என ஆளுநருக்கு தெரியவில்லை’ என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (20.8.2024) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நாணயம் வெளியிட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்து…?
பதில்:- தொடர்ந்து இதேபோல தான் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். இது தவறான செயல். மேனாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகியோருக்கும் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்து தவறானது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?.
பதில்: நாணயங்கள் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு ஒரு மரியாதை செலுத்தக்கூடிய நிகழ்வு. இதனை மாற்று கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு மாண்பு இருக்கிறது. மறைந்த தலைவர்களை பற்றி பேசமாட்டார்கள். எடப்பாடி பழனி சாமி காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார். அவர் அப்படி பேசுவது தவறானது.
கீழ்பவானி அணைக்கு ரூ.900 கோடி
கேள்வி:- கீழ்பவானி அணையில் நீர் கசிவு இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- இந்த கால்வாய்களை சீர்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அங்குள்ள விவசாயிகள் அதனை சரிசெய்யக் கூடாது என தகராறு செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளை சிறிது சிறிதாக சரி செய்து அந்த திட்டத்தை நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி:- காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து?
பதில்:- இந்த திட்டம் குறித்து ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தான் ஈடுபட்டு வருகிறது.
கேள்வி:- தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் குறித்து?
பதில்:- தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் என்னுடைய நீண்ட நாள் கனவு திட்டம் ஆகும். அந்த திட்டத்தை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்.
செத்துப்போன மொழி
கேள்வி:- சமஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி. அறிவியல் பூர்வமான மொழி என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளாரே?
பதில்:- சமஸ்கிருதம் செத்துப்போன மொழி. அதைப் பேசவே முடியாது என ஆளுநருக்கு தெரியவில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.