சென்னை, ஆக. 21- மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’என்ற வாசகத்துடன் 100 ரூபாய் மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக மேனாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது நினைவாக சென்னை கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும், அதேபோன்று கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டமும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் திறக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 18.8.2024 அன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நாணய வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து அறிவிக்கப்பட்டது முதல் அதை எங்கே வாங்கலாம்? விலை என்ன? அனைத்து நாணயத்தை போல இந்த நாணயமும் கடைகளில் புழங்க முடியுமா? என திமுகவினர் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
மேலும், விழாவில் பங்கேற்ற பலர் நாணயத்தைப் பெற முன்வந்ததையும் பார்க்க முடிந்தது. அதில் சிலர் அதிக விலை கொடுத்து நாணயத்தை வாங்க ஆர்வம் காட்டியதையும் பார்க்க முடிந்தது.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத்திருமண விழா ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து பேசுகையில், “நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த 100 ரூபாய் நாணயத்தை ரூ.10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.