அ.தி.மு.க. போல பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை இபிஎசு-க்கு ஆ.ராசா பதிலடி!

2 Min Read

சென்னை, ஆக. 21- மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்னதான் பிரச்சினை என திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கலைஞரை ஒன்றிய அரசு கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது எனவும் ஆ.ராசா எம்.பி. சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஆ.ராசா தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கலைஞர் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல் காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன

பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?

கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் ஹிந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் ஹிந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை?
கலைஞருக்காக வெளியிடப் பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்தப் பட்டியலில் (லிஸ்ட்டில்) சேர்ப்பது எனப் புரியவில்லை.

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண் பையும் பக்குவமான அணுகு முறைதான் இன்றைய திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமும் நிறைந்திருக்கிறது என்று பதிலடி கொடுத்தார் ஆ.இராசா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *