வடசென்னை, ஆக. 21- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை 6 மணிக்கு கொளத்தூர் ச.இராசேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக த.மரகத மணி கடவுள் மறுப்பு கூறினார். ச.இரா சேந்திரன் தமது தலைமை உரையில் கூட்டத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டுள்ள தோழர்களைப் பார்த்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சமூக வலை தளங்களில் திராவிடத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் பார்ப்பனர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கின்ற பணியில் கழகத் தோழர்கள் சளைக்காது ஈடுபட வேண்டுமெனவும், தான் அதில் முனைப் புடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இளைஞரணி – மாணவர் கழக பிரச்சாரப் பணிகள்
கூட்டத்திற்கு முன்னிலை வகித்த தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளி வாயில்களில் நடத்தப்பட உள்ள பிரச்சார கூட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு அனைத்துத் தோழர்களும் சிறந்த முறையில் ஒத்துழைக்க வேண்டுமென்றார்.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் கழக வழக்குரைஞர்கள் வடசென்னை மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளதைக் குறிப்பிட்டு, கழகத் தோழர்களின் சட்ட உதவிக்கு ஏற்றது செய்வதற்கு அனைத்து வழக்குரைஞர்களும் தயாராக உள்ளோம் என்றார். நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்களைப் பாராட்டி, இனிவரும் காலத்தில் கொள்கைப் பிரச்சாரப் பணிகளை மாவட்டக் கழகத் தோழர்கள் வேகமாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டுமென்றார். கழக இளைஞரணியினர் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 5 பிரச்சாரக் கூட்டங்களை நடத்திட வேண்டுமெனக் குறிப்பிட்டு, மாவட்டக் கழகம் நல்ல முறையில் ஒத்துழைப்புத் தரும் என்றார்.
வடசென்னை மவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் பேசும் போது, தாணா தெரு, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு மாவட் டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு ஏற்ற ஒத்துழைப்பைத் தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு தநதை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
கழக வெளியீடுகள் – புத்தக விற்பனை மற்றும் விநியோகிப்பதன் மூலம் பிரச்சாரப் பணிகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன் குறிப்பிட்டு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, அயன்புரம் தலைவர் சு.துரைராசு, எருக்கமா நகர் தலைவர் சொ.அன்பு, கண்ணதாசன் நகர் அமைப்பாளர் கண்மணி துரை, முத்தமிழ் நகர் அமைப்பாளர் வி.இரவிக்குமார்.
வழக்குரைஞர் மு.வேலவன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், துணைத் தலைவர் வ.கலைச்செல்வன், வ.தமிழ்ச் செலவன் ஆகியோர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடத்துவது பற்றியும், கழகக் கொடிக் கம்பங்கள் அமைப்பது குறித்தும் குறிப்பிட்டுப் பேசினர்.
பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை கடந்த ஆண்டைப் போலவே தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை அனைத்துத் தோழர்களின் ஒத்துழைப்போடு வியாசர்பாடி பகுதியில் சிறந்த முறையில் நடத்தப்படுமெனவும், வடசென்னை பகுதியில் இரண்டு இடங்களில் நடக்க உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் தான் உரையாற்ற உள்ளதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, மாவட்டக் கழகத்தின் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு என்றும் போல் தன் ஒத்துழைப்பு உண்டு என்றார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி நிறைவுரையின் போது தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று கழகத் தோழர்கள் வடசென்னை மாவட்டத்தில் ஆங்காங்கே தந்தை பெரியார் படங்களை வைத்து இனிப்புகள் வழங்கி எளிமையாக அதே நேரத்தில் சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
17.9.2024 – தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று கொடுங்கையூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து – அங்கிருந்து புறப்பட்டு பிற இடங்களில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்துத் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுமெனவும், முன்பு போன்று வாகனப் பேரணியாகச் சென்று அந்நிகழ்ச்சி்யை சிறப்புடையதாக்க வேண்டுமென்றார்
கழகக் கொடி ஏற்றப்படும்
வடசென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2024 அன்று கொடுங்கையூர், பட்டாளம், புதுவண்ணை, அண்ணா சாலை ஆகிய இடங்களில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து – இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
குயப்பேட்டையில் – அய்ந்து விளக்கு அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையை நல்ல முறையில் புதுப்பித்து அங்கு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு 22.9.2024, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரையில் வடசென்னை மாவட்டத்தின் வியாசர்பாடி, பெரம்பூர், கண்ணதாசன் நகர், எருக்கஞ்சேரி, கொடுங்கையூர், செம்பியம், அயன்புரம், கொளத்தூர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி வைத்து விழாவை சிறப்பாக நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.
வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் நடத்துவதாக உள்ள தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாவட்டத்தின் 5 பகுதிகளில் நடத்தப்படுவதற்கும், திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கல்லூரி – பள்ளிகளின் வாயில்களில் நடத்தப்பட உள்ள இந்திய அரசமைப்புச் சட்ட 51A(h) – மூடநம்பிக்கை விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்களுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒத்துழைப்புத் தந்து நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்துவதென்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில், கொளத்தூர் இராசேந்திரன் தனது மகள் இளமதி மற்றும் முகம்மது முஸ்தபா, பெரியார் பிஞ்சுகள் மீனா, மிலன் ஆகியோரை தோழர்கள் மததியில் அறிமுகம் செய்து வைத்தார். ச.இராசேந்திரனுக்கு ச.இன்பக்கனி பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். அனைவருக்கும் மாலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கிட, நா.பார்த்திபன் நன்றி கூறிட கூட்டம் நிறைவுற்றது.