சென்னை, ஆக.21- கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமையவிருப்பதாக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
பழந்தமிழா் பெருமைக்கு சான்றாக கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன. அவற்றுக்கு இணையாக, கங்கையும், கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழனின் தலைநகரமாம் கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக ரூ. 22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமையப் பெறவுள்ளது – இவ்வாறு அதில் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
சிதம்பரம் நடராஜர் கோயில்
கனக சபை மீது நின்று தரிசனம் செய்யலாம்
உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 21- “சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது,” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதை அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20.8.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சார்பில் வழக்குரைஞர்கள் அரிசங்கர், வர்ஷா ஆகியோர் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தனர். அதில், “கனகசபையில் நின்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. நாள்தோறும் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மட்டும் கனகசபையில் இருந்து வழிபாடு நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனி திருமஞ்சனம் ஏற்கெனவே முடிந்து விட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது அறநிலையத்துறை தரப்பில், “கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய எந்த தடையுத்தரவும் இல்லை. ஆனாலும் விழாக் காலங்களில் பக்தர்களை கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை” என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் இருந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். யாரும் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
நாகை- இலங்கை கப்பல்
செப்.15 வரை
வாரத்தில் 3 நாள் மட்டுமே சேவை
நாகப்பட்டினம்,ஆக.21- நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 16ஆம் தேதி துவங்கியது.
இந்நிலையில், நேற்று (20.8.2024) வழக்கம் போல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை தொடங்கியது. 5 பயணிகளுடன் சென்ற கப்பல், காங்கேசன் துறையில் இருந்து 19 பயணிகளுடன் நாகப்பட்டினம் வந்தது.
பயணிகள் முன்பதிவு குறைவாக இருப்பதால், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்தால் சேவையில் மாற்றம் செய்யப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.