‘‘நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் உள்ள மலப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் அரப்பளீஸ்வரருக்கு சிறப்பான வரலாறு உண்டு. அதேபோல் கோவில் உள்பிரகாரங்களில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் வரலாறு சொல்லப்பட்டி ருக்கிறது. இந்தக் கோவிலின் கருவறைக்குப் பின்புறம், ஓரத்தில் குறி சொல்லும் கல் ஒன்று உள்ளது. பழங்காலத்தில் இந்தக் கல்லின் மீது காணப்படும் உருண்டை வடிவிலான மற்றொரு கல்லில், முதலில் வலது கையை வைத்து, அதன் மேல் இடது கையை வைத்து, நினைத்ததை மனதில் வேண்டிக் கொள்ளவேண்டும். அப்போது வேண்டுதல் நிறைவேறி விடும் என்பதை உறுதிப்படுத்த அந்த உருண்டையான கல் சுற்றுமாம். இதனால் மலைவாழ் மக்கள் பலரும் முக்கியமான வேண்டுதல்களை அங்கு வந்து நிறைவேற்றிச் சென்றிருக்கிறார்கள். தற்போதும் அந்தக் கல்லின்மீது கைகளை வைப்போர் சிலருக்கு, அவர்களின் வேண்டுதல் உறுதிப்படுத்தப்படுகிறது. கொல்லிமலையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் தற்போது அந்தக் கல்லை கண்டு, அதன் தன்மையை உணர்ந்து தங்கள் வேண்டுதலை முன்வைக்கின்றனர்.’’
இப்படி ஒரு தகவல் ஒரு நாளேட்டில் வெளிவந்துள்ளது.
ஒரு கல்லில் வலது கையை வைத்து, அதன்மேல் இடது கையை வைத்து நினைத்ததை மனதில் வேண்டிக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறிவிடுமாம்!
சிரிப்பு ஒரு பக்கம் – சிந்தனை மறுபக்கம்; இந்த 2024 ஆம் ஆண்டிலும் இப்படியொரு செய்தி!
கொலைகாரன் ஒருவன், வழிப்பறி கள்வன் ஒருவன், தன் எதிரி வீட்டுக்கு நெருப்பு வைக்கும் ஒருவன்… இத்தியாதி… இத்தியாதி பஞ்சமா பாதகர்கள், தங்கள்மீதான குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து விடுபட்டு சொகுசாக வாழ வேண்டும் என்று – கைகளை அந்தக் கல்லில் வைத்து மனதார வேண்டினால், அவன் விரும்பியது நடக்குமா?
மூளை இருக்கும் இடத்தில் கல் இருந்தால், அவன் ஒருக்கால் நம்புவான்.
ஒழுக்கக் கேட்டை வளர்க்கவா பக்தி?
புத்தியுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!
– மயிலாடன்