விநாயகர் சதுர்த்தி கண்ட இடங்களில் எல்லாம் சிலைகளை வைக்கக் கூடாது காவல்துறை சுற்றறிக்கை

2 Min Read

சென்னை, ஆக.20- விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணிகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் திட்டமிடுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் சங்கர் ஜிவால் விதித்து, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயனக் கலவை இல்லாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. மதவெறி தூண்டும் வகையில், பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்புவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், ஊர்வலம் செல்லும் இடங்கள், கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. மினி லாரி மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து செல்லக் கூடாது.

ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கிருந்து மின்சாரம் பெறப்படுகிறது என்பதை கடிதம் மூலம் மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். பொது இடங்களில் சிலை வைக்க உள்ளாட்சி அமைப்பு அனுமதி அவசியம்.
மேலும், பயங்கரவாத இயக்கத்தினர் அச்சுறுத்தல் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை காட்டிலும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை ஆக.28ஆம் தேதிக்குள் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எந்தெந்த இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ அங்கு தான் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். புதிய மற்றும் பதற்றமான இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. உரிய அனுமதி இல்லாமல், பேனர்கள், கொடிகள் கட்டுவதை தடுக்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பாக சிலைகளில் அணிவிக்கப்பட்டுள்ள துணிகள், பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள், வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் பொருட்களை முற்றிலும் அகற்றிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *