மகனுக்கு கல்வியறிவு ஊட்டிய பள்ளி நன்றி உணர்வில் கூலிவாங்காமல் கட்டட வேலை செய்து கொடுத்த தந்தை

2 Min Read

மதுரை, ஆக.20 மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவனின் தந்தை, மகனுக்கு கல்வி அறிவை ஊட்டிய அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியம் வாங்காமல் கட்டட வேலைகளை மராமத்து பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டட மராமத்து வேலைகளை பார்க்க இப்பள்ளியில் படித்த மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டட பணியாளருமான அழகுமுருகனிடம் தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் வேலை பார்க்கச் சொல்லியுள்ளனர். மூன்று நாட்கள் வேலை பார்த்தவரிடம், தலைமையாசிரியர் கூலியை வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை கூலி வேண்டாமென்றும் இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும் என்றும் கூறி பணத்தை வாங்க மறுத்தார்.

இது குறித்து அழகுமுருகன் கூறுகையில், “எனது மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்கிறார். எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்யவேண்டும் என எண்ணினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
ஆசிரியர் முருகேசன் கூறுகையில், “மாணவர் பீமன் பிளஸ் 2 தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் நட்டு வளர்த்தார். இதை அறிந்த தனியார் நிறுவனம் இவரது உயர் கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது” என்றார்.

வன்கொடுமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் : இந்திய கம்யூ.

சென்னை, ஆக.20- தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, வன்கொடுமை சட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாநிலம் தழுவிய சிறப்பு பேரவைக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று (19.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு, துணை செயலா் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் தேசிய தலைவா் அ.ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து ராமமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேங்கைவயல் உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமை சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். மனிதக் கழிவை மனிதன் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.

தனியாா் துறைகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்தவா்களுக்கு சிறப்பு பணப் பயன்கள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கி உரிய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *