சென்னை, ஆக.20 மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18.8.2024 அன்று நடைபெற்றது. நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
அரசியல் ‘சலசலப்பு’
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு என ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கே நிலவி வந்தது. இந்நிலையில், கலைஞரின் நினைவு நாணய வெளியீட்டு விழா, தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன.
இந்த தேநீர் விருந்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையில் இருந்து யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், வாழ்த்துகள் மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாட்டின் எதிர்கட்சித்தலைவர் விமர்சனம் செய்திருந்தார் இந்த நிலையில் திரு வொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்லத் திருமண விழாவில் நேற்று (19.8.2024) கலந்துகொண்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “ராஜ்நாத்சிங் கலைஞரை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞர் நாணயம் வெளியிடுகிறார்கள். அதில் ஹிந்தி இடம் பெற்றுள்ளது. `தமிழ், தமிழ்’ என திமுகவினர் முழங்குகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டு நடப்பு பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அனுமதி கொடுத்து ஒன்றிய அரசின் மூலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல. இது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று பேசினார்.
மதவாத சக்திகளுடன் சமரசமில்லை – சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதவாத சக்திகளுடன் எப்போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன். காமராஜருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியவர் கலைஞர். தமிழ்நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைத்தவர். அவரை யார் வாழ்த்தினாலும் மகிழ்ச்சி யடைவோம். உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை அதிமுக அனுமதித்தது. தமிழ்நாட்டின் நலனை விட்டுக் கொடுத்து, பின் னுக்குத் தள்ளி ஒன்றிய அரசின் எந்த திட்டங்களையும் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடவில்லை. கலைஞரை இதற்கு முன்பு காழ்ப்புணர்ச்சியுடன் பேசியவர்கள் இன்று மேடை ஏறி அவரை வாழ்த்துகிறார்கள் என்றால் மகிழ்ச்சி தான். ஆனால், தேர்தல் பரப்புரையில் திமுகவையும், கலைஞரையும் வசைபாடி யதை பாஜக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.