டேராடூன், ஆக.20 உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி பேருந்து மூலம் பயணம் செய்து டில்லி அய்எஸ்பிடி பேருந்து நிலையம் வந்த சிறுமி, பஞ்சாப் செல்வது எப்படி என அங்குள்ள நடத்துநர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது தன்னுடைய பேருந்தில் ஏறுமாறு சிறுமியிடன் கூறிய அந்த நடத்துநர், டேராடூனில் இருந்து பஞ்சாப் செல்லலாம் என தெரிவித்துள்ளார். நடத்துநரின் பேச்சை நம்பி சிறுமியும் அந்த பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர். இரவு நேரத்தையும், பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைந்ததையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பேருந்திற்கு உள்ளேயே வைத்து வலுக்கட்டாயமாக அந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் நடத்துநர் பணத்தை கவுண்டரில் ஒப்படைத்தபோது நடந்த நிகழ்வினை காசாளரிடம் தெரி வித்துள்ளார். தொடர்ந்து காசாளரும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின்னர் அவர்கள் சிறுமியை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
5 பேர் கொண்ட கும்பலால் பாதிப்புக்கு ஆளான சிறுமி, இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் தனியாக இருந்துள்ளார். சிறுமி இருக்கும் தகவல் குழந்தைகள் நலக் குழுவுக்கு தெரியவந்தது. இதன் பின்னரே சிறுமிக்கு உதவிக்கரம் கிடைத்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர், சிறுமி யைப் பாதுகாப்புக்காக அரசு பெண்கள் இல்லத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்ற வாளிகளான 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்த காவல்துறையினர், பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். பேருந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.