நிதீஷ்குமார் – சிராக் பஸ்வான் எதிர்ப்பு!
பாட்னா, ஆக.20 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 45 அரசு பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப எடுத்த முடிவு தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
ஜனதா தள் (அய்க்கிய) மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) இந்த நடவடிக்கையை எதிர்த்தன.
கே.சி.தியாகி
இது தொடர்பாக நிதீஷ் குமாரின் ஜனதா தள கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியதாவது:
‘‘இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புமாறு கோரிக்கை வைத்து வரும் கட்சி நாங்கள். நாங்கள் ராம் மனோகர் லோகியாவின் சமூக நீதி கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். நூற்றாண்டு களாக சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும்போது, இவர்கள் நேரடி நியமனம் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தில் உயரதிகாரிகளை அரசு பதவியில் நியமிக்கும் திட்டத்தை முன்வைக்கின்றனர். அரசாங்கத்தின் இந்த உத்தரவு எங்களுக்குக் கடும் கவலையளிக்கிறது,” என்று கே.சி.தியாகி கூறினார்
மேலும் அவர் கூறுகையில், ‘‘இதை செய்வ தன் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நெருக்கடி கொடுக்க ஒரு வாய்ப்பை தட்டில் வைத்து கொடுக்கிறது என்றும் தியாகி குறிப்பிட்டார் “என்.டி.ஏ.வை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு ஆகும். ராகுல் காந்தி சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை நாயகனாக மாறுவார். எதிர்க்கட்சியின் கைகளில் நாம் ஆயுதத்தை கொடுக்கக்கூடாது” என்று கே.சி.தியாகி கூறினார்.
சிராக் பஸ்வான்
எல்.ஜே.பி. கட்சி (ராம் விலாஸ் பிரிவு) தலை வரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வானும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ‘‘எந்த வொரு அரசு நியமனத்திலும் இட ஒதுக்கீடு விதிகள் இருக்கவேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை, அரசுப் பதவிகளிலும் அது அமல்படுத்தப்படாவிட்டால்… கவலையளிக்கும் ஒன்று ஆகும்’’ என்று சிராக் பஸ்வான் பி.டி.அய். செய்தியாளரிடம் தெரிவித்தார்.
‘‘இந்த அரசோடு இணைந்து இருக்கிறேன் என்பதற்காக எனது எதிர்ப்பை காட்டமல் இருக்க முடியாது. இதை எதிர்க்கும் உரிமை எனக்கு உண்டு. அதைத் தான் செய்வதாகவும் பஸ்வான் கூறினார். தனது கட்சியைப் பொறுத்தவரை, இத்தகைய நடவடிக்கைக்கு ‘‘முற்றிலும் ஆதரவு இல்லை’’ என்றும் ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறினார்.
அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.கே.வாஜ்பாய் கூறுகையில், ‘‘இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடி நியமனத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. என்.டி.ஏ.வின் ஒரு பகுதியாக இருப்ப தால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுப்போம்.’’
2017 இல், நிட்டி ஆயோக் மற்றும் ஒன்றிய அரசின் பணியாளர் துறை செயலாளர்களின் குழு ஒன்றிய அரசின் செயலாளர் மட்டத்தில் தனியார் அதிகாரிகளைச் சேர்க்க பரிந்துரைத்தது.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத்தில், நேரடி நியமனம் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செய லாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ராகுல் காந்தி – மல்லிகார்ஜுன கார்கே
ஒன்றிய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதை எதிர்த்த மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, “இது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல். எஸ்.சி, எஸ்.டி,
ஓ.பி.சி, பணியிடங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசமைப்புச் சட்டத்தை மாற்று வதற்கான பா.ஜ.க-வின் ‘சக்கரவியூகம்’ இது’’ என்றனர். இந்த நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் அமைச்சரவை செயல கத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்.. இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்படும், இது மொத்தம் அய்ந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
கடந்த 17.8.2024 அன்று, UPSC 45 பதவிக ளுக்கான விளம்பரத்தை வெளியிட்டது – 10 கூட்டுச் செயலாளர் நிலை பதவிகள் மற்றும் 35 இயக்குநர் அல்லது துணைச் செயலாளர் பதவிகள் – இவை ஒப்பந்த அடிப்படையில் பக்கவாட்டு நுழைவு முறையில் நிரப்பப்பட உள்ளன..”
இப்பதவி நியமனங்கள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தவிர்க்கின்றன!
அதிகாரவர்க்கத்தில் எந்தவொரு நியம னத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பொதுத்துறை வேலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், ‘‘13- புள்ளி பட்டியல்” என்று அழைக்கப்படும் முறையின் மூலம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கையின்படி, காலியிடங்களின் பட்டிய லில் ஒரு விண்ணப்பதாரரின் நிலை, அவரது குழுவின் (SC, ST, OBC, மற்றும் இப்போது EWS) ஒதுக்கீட்டு சதவீதத்தை நூறால் வகுப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. விளம்பரப்படுத்தப்பட்ட 45 காலியிடங்கள் ஒரே குழுவாக கருதப்பட்டால், 13-புள்ளி பட்டியலின்படி, ஆறு காலியிடங்கள் SC விண்ணப்பதாரர்களுக்கும், மூன்று ST விண்ணப்பதாரர்களுக்கும், 12 OBC விண்ணப்ப தாரர்களுக்கும், நான்கு EWS பிரிவினருக்கும் ஒதுக்கப்படும். ஆனால், இந்த காலியிடங்கள் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால், இவை அனைத்தும் ஒற்றை-பதவி காலியிடங்களாக உள்ளன. எனவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தவிர்க்கின்றன.