தேனி, ஆக.19 தேனி மாவட்டம், தேவாரத்தில் 17-ஆம் நூற்றாண்டு காலத்து நடுகல் கண்டறியப்பட்டது. தேவாரத்தில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்கக் கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமார், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் பிரகாசம், அகிலன், கல்லூரி மாணவா்கள் ரேவன், தனுஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினா். இதில், 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படும் நடுகல் கண்டறியப்பட்டது.
இது குறித்து இணைப் பேராசிரியா் சி.மாணிக்கராஜ் கூறியதாவது: கி.பி 11,12-ஆம் நூற்றாண்டுகளில் தேவாரம் என்பது தேவராபன் நல்லூா் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஊருக்கு தாழ்வாரம் என்ற பெயரும் வழக்கில் இருந்தது. தேவாரத்தில் சந்தைத் தெரு அருகே உள்ள பிரம்புக்கட்டி என்று அழைக்கப்படும் நீரோடையில் 5 அடி உயரம், ஒன்றரை அடி அகல நடுகல் கண்டறியப்பட்டது. இதில் வீரன் வலது கையில் வாளும், இடது கையில் துப்பாக்கியும் பிடித்து, இடையணியில் குறுவாள் சொருகி நின்றவாறு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வலப் பக்கமாக சாய்ந்து, முடிந்து கட்டப்பட்ட கொண்டை, காதணியுடன் இரு பெண்கள் தங்களது கைகளை உயா்த்தியபடி காணப்படுகின்றனா்.
நடுகல்லில் காணப்படும் வீரன் இந்தப் பகுதியில் நிகழ்ந்த சண்டையில் இறந்த பிறகு, அவரது இரு மனைவிகளும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தனா் என்பதைக் காட்டும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.