முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல், இலக்கியம், சமூகப் பணிகள் என பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராக திகழ்ந்த கலைஞர், தமிழ்நாடு வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டு விளங்கினார். பன்முகத் திறமை கொண்ட அவர், தனது எழுத்துகள் மூலம் தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அவரது இலக்கிய ஆற்றல், அவரது படைப்புகளின் மூலம் பிரகாசித்ததுடன், அவருக்கு ‘கலைஞர்’ என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்துள்ளது.அவரது கொள்கைகள், அவரது பணிகளை இந்த நாணயம் என்றென்றும் நினைவூட்டும். கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வை, சிந்தனைகள், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி
பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததற்கும், நாணய வெளியீட்டு விழா வெற்றி பெற ஆதரவு அளித்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.