சென்னை, ஆக. 18- சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க காவல் துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதன்கிழமைதோறும் பொது மக்களிடம் புகார் மனுக்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்வதாக அறிவித்த காவல்ஆணையர் அருண், கடந்த புதன் (14.8.2024) அன்று புகார் மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.
அப்படி பெறப்பட்ட புகார் மனுக்களில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்த மனுக்களை தனியாக பிரித்து,`இந்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், சுணக்கம் காட்டினாலோ, அலைக்கழித்தாலோ, கையூட்டு பெற்றாலோ, ஒருதரப்புக்கு சாதகமாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய குற்றப்பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், சிலநேரங்களில் காவல் துறையினரே ஆதாயம் பெறுவதாகவும், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், ஒன்றிய குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியிருந்தாலோ, கைது நடவடிக்கை மேற்கொள்ள இருந்தாலோ அதுகுறித்து தனதுகவனத்துக்கு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அருண், அப்பிரிவு காவல் துறையினருக்கு கண்டிப்பு காட்டியுள்ளார். இதுபோல், காவல்துறை விசாரணை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.