மதுரை, ஆக 18- தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்துக்கு அவரது கொள்ளுப்பேத்தி க.மனோசாந்தி காப்பாளராகக் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு மறைந்த முதலமைச்சர் கலைஞர், மதுரை கலைஞர் கருணாநிதி நகரில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திறந்து வைத்தார்.
மேலும், அந்த மணிமண்டபத்துக்கு தேவநேயப் பாவாணர் வாரிசு தாரரான அவரது பேத்தி ஏ.டி.எம்.டி.பரிபூரணம் என்பவரை, செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் காப்பாளராக (அலுவலக உதவியாளர்) நியமனம் செய்தார்.
அத்துடன், பாவாணரின் நூல் களை அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கியும் சிறப்பித்தார். மணிமண்டபத்தைச் சிறப்பாகப் பராமரித்து வந்த ஏ.எம்,டி.பரிபூரணம், கடந்த 2022ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்குப் பிறகு ஆட்கள் நியமிக்கப் படாததால் மணி மண்டபம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. அதனால், ஏ.எம்.டி.பரிபூரணத்தின் மகளும், தேவநேயப் பாவாணரின் கொள்ளுப்பேத்தியுமான க.மனோசாந்தி என்பவர், கருணை அடிப்படையில் தனது தாய் பார்த்து வந்த அந்தப் பணியை தமக்கு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குச் செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக விண்ணப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து தேவநேயப் பாவாணரின் கொள்ளுப்பேத்தி க.மனோ சாந்தியின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு மதுரை தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் காலியாக உள்ள காப்பாளர் பணியைக் கருணை அடிப் படையில் வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பணி நியமன ஆணையை மனோசாந்திக்கு வழங்கினார்.
பணி ஆணையைப் பெற்றுக் கொண்ட க.மனோசாந்தி தமக்குப் பணி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மதுரை தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தின் காப்பாளராக அவரது கொள்ளு பேத்தி மனோ சாந்தி நியமனம்
Leave a Comment