சென்னை, ஆக.18- வட கிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச் சர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை பெரு நகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் வளாகக் கூட்டரங்கில் 16.8.2024 அன்று நடந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் ரூ.3220 கோடி மதிப்பில் 675.37 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 559.65 கி.மீ. நீளத்திற்கும், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியின் கீழ், கோவளம் வடிநிலப் பகுதி கட்டம்-1இல் ரூ.150.45 கோடி மதிப்பில் 41.77 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 37.09 கி.மீ. நீளத்திற்கும், கோவளம் வடிநிலப் பகுதி கட்டம்-2இல் ரூ.447.03 கோடி மதிப்பில் 118.77 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 85.71 கி.மீ. நீளத்திற்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கோவளம் வடிநிலப் பகுதி கட்டம்-3இல் ரூ.760.10 கோடி மதிப்பில் 140.10 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் வருகிறது.
தென்மேற்குப் பருவமழையினை முன்னிட்டு, 792 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளில் 611 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.287.49 கோடி மதிப்பில் 42,08,985 சதுர மீட்டர் பரப்பளவில் 210 எண்ணிக்கையிலான குளங்கள் புனரமைப்புப் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ.200.56 கோடி மதிப்பில் 23,69,554 சதுர மீட்டர் பரப்பளவிலான 177 குளங்களில் புனரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையின் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கவைப்பதற்கு 169 நிவாரண மய்யங்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இதில், மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சசிகாந்த் செந்தில், துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், த.வேலு, இ.பரந்தாமன், ஜெ.கருணாநிதி, அய்ட்ரீம் மூர்த்தி, வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், கணபதி, ஜோசப் சாமுவேல், அசன் மவுலானா,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நீர்வளத் துறை செயலாளர் மணிவாசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
61 சதவீதம் தூர்வாரும் பணிகள் நிறைவு
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறு கையில்,‘‘ சென்னை மாநகர பகுதியில் 3,040 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 61 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது.
கூவம் பகுதிகளை தூர்வார வேண்டுமென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத் தார்கள். 320 கி.மீ., நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 45 நாட்களுக்குள் தூர்வாரும் பணிகளை எவ்வளவு முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கப்படும்’’ என்றார்.