ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்குஒரு திருமா அல்ல – ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான் பிறந்த நாள் கூட்டம்! பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்!
சென்னை, ஆக.18 ஜாதி வெறி, மதவெறியை எதிர்ப்பதற்கு, ஒரு திருமா அல்ல – ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான் இந்தப் பிறந்த நாள் கூட்டம் அடையாளமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பு; பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
எழுச்சித் தமிழரின் பிறந்த நாள்:
கவியரங்கம் – வாழ்த்தரங்கம் – பட்டிமன்றம்!
நேற்று முன்தினம் (16.8.2024) மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் கவியரங்கம் – கருத்தரங்கம் – பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழ்த்தரங்கத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
எல்லையற்ற மகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய நம்முடைய எழுச்சித் தமிழருடைய 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்ற இந்தப் பெருமைக்குரிய பிறந்த நாள் விழாவில், ஒரு கொள்கைத் திருவிழாவில் கலந்துகொண்டு, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய சிந்தனைச்செல்வன் அவர்களே, இரவிக்குமார் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்களே, எஸ்.எஸ்.பாலாஜி அவர்களே, ஊடகப் பிரிவின் மேனாள் செயலாளர் பனையூர் பாபு அவர்களே, அருமைச் சகோதரர் வன்னியரசு அவர்களே,
திரைப்படக் கலைஞராக இருந்தாலும், அதிலும் தனக்கென ஒரு கொள்கை உண்டு என்பதை எப்பொழுதும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் நிலைநாட்டிக் கொண்டிருப்பவருமான அருமைச் சகோதரர் திரு.ராஜ்கிரண் அவர்களே,
இசை யாருக்கும் தனியுடைமை அல்ல;
எல்லோருக்கும் பொதுவுடைமைதான்!
அதேபோன்று, திரைப்படத் துறையில் பிரபலமான இசையமைப்பாளர் – எங்களால் எல்லாத் துறையிலும் இசையிலும், எங்களால் இசைவோடு வாழ முடியும் என்று என்றைக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கக் கூடிய, இசை யாருக்கும் தனியுடைமை அல்ல; எல்லோருக்கும் பொதுவுடைமைதான் – சமுதாயத்தில் யாரை வேண்டுமானாலும் உயர்த்த முடியும், உயர முடியும் என்று ஒரு புதிய வடிவத்தைக் காணுகின்ற அருமைத் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுடைய அன்புச்செல்வன் நம்முடைய அருமைச் சகோதரர் சிறீகாந்த் தேவா அவர்களே,
புரட்சி சிந்தனையாளர் திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்நிகழ்வில் ஓர் அற்புதமான மதிப்பீடு என்று சொன்னால், அதுதான் பெருமைக்குரிய திரைப்பட இயக்குநர் என்ற தகுதியைத் தாண்டி, ஒரு புரட்சி சிந்தனையாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கக்கூடிய அருமை திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள். அவருடைய உரை, பாராட்டுரை, கருத்துரை சுருக்கமாக இருந்தாலும், சுருக்கென்று இருந்தது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிகழ்ச்சியில் எதிரில், நாஞ்சில் சம்பத் அவர்கள் உள்பட அடுத்து, ஏனென்றால், இவர்கள் வந்த பிறகுதான், மருத்துவம் பார்த்த பிறகுதான், திருமா பிறக்கப் போகிறார், 12 மணிக்கு. அதுதான் மிக முக்கியமானது.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நல்ல சூழல். அதுபோலவே, பட்டிமன்ற பேச்சாளர் என்று சொன்னாலும், ஆழமான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துச் சொன்ன அருமைத் தோழியார் நீலவேணி முத்து அவர்களே,
வழமையானவன், வழமையான விழாவிலே வழக்கம்போல் வாழ்த்த வந்திருக்கின்றேன்!
இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற எண்ணற்ற என்னருஞ் சகோதரர்களே, விடுதலைச் சிறுத்தைகளே, சீறும் சிறுத்தைகளின், வேரும், விழுதும் பலமாக இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக இருக்கக்கூடிய அருமை நண்பர்களே!
அதேபோல, தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தி ருப்போம் – இங்கேயும் வந்து வாழ்த்துகிறோம் என்று சொல்லுகின்ற அன்புச் சகோதரர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்!
வழமையானவன், வழமையான விழாவிலே வழக்கம்போல் வாழ்த்த வந்திருக்கின்றேன், அவ்வளவு தான், வேறொன்றுமில்லை.
இது நம் குடும்பத்து விழா என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விழாவிற்கு நான் வராவிட்டால்தான் செய்தியாகுமே தவிர, வந்தால், அது செய்தியாக இருக்காது.
ஏனென்றால், இப்பொழுது திருமா அவர்கள்மீது சிலருக்குத் திடீர் காதல் – அரசியல் காதல் வந்திருக்கின்ற காலகட்டம் இது. ஆனால், எங்களுடைய பாசம் குடும்பம் பாசம், கொள்கைப் பாசம் – ரத்தப் பாசத்தைவிட கொள்கைப் பாசம் இருக்கிறதே, அது கெட்டியானது, பிரிக்கப்பட முடியாதது.
எந்த விலையையும் கொடுக்கக்கூடிய தெம்பும், திராணியும் உண்டு!
அந்தக் கொள்கை உறவுகள்தான் இங்கே ஜாதி யில்லை, மதம் இல்லை, கொள்கை உண்டு, லட்சியம் உண்டு – அதற்காக எந்த விலையையும் கொடுக்கக்கூடிய தெம்பும், திராணியும் இங்கே கூடியிருக்கின்ற அத்துணை பேருக்கும் உண்டு.
அப்படிப்பட்ட ஓர் அருமையான இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.
கருத்தியலால் ஒன்றுபட்டவர்கள் தந்தை பெரியாரும் – அம்பேத்கரும்!
சமூக மாற்றம், சமூகப் புரட்சி – அறிவாசான் தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
அவர்களுடைய எந்தக் கொள்கைகளை எடுத்துச் சொன்னாலும், மேற்கோள்களை எடுத்துச் சொன்னாலும், அதற்குக் கீழே பெரியார் என்று போட்டால், அம்பேத்கர் சொன்னதற்குக் கீழே பெரியார் என்று போடலாம்; பெரியார் சொன்னதற்குக் கீழே அம்பேத்கர் என்று போடலாம்.ஏனென்றால், அவர்கள் கருத்தியலால் ஒன்றுபட்டவர்கள்.
அதுபோலவேதான் நாங்கள் இங்கே அந்தப் பணியை செய்துகொண்டிருக்கின்றோம். அந்தப் பணியை சிறப்பாக செய்வதற்காகத்தான் எங்கள் வாழ்க்கை நீளவேண்டும்.
உங்களை வாழ்த்த வந்திருக்கின்றோம்; அது சம்பிரதாயத்திற்காக அல்ல; பெருமைக்காக அல்ல; விளம்பரத்திற்காக அல்ல; அரசியல் லாபத்திற்காக அல்ல. சில பேர் உங்களைப்பற்றி மிகக் கவலையோடு இருக்கிறார்கள் இப்பொழுது.
அதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். என்றைக்கும் உங்களுடைய காதலர்களாக நாங்கள் இருக்கக் கூடியவர்கள்.
திராவிடம்தான் ஒன்றாக இணைக்கும்; திராவிடம்தான் உயர்த்தும்!
திராவிடம்தான் காப்பாற்றும்; திராவிடம்தான் ஒன்றாக இணைக்கும்; திராவிடம்தான் உயர்த்தும் – இதிலொன்றும் சந்தேகமேயில்லை. இதை நன்றாகப் புரிந்துகொண்டிருப்பவர் எழுச்சித் தமிழர் அவர்கள்.
இதில் யாருக்கும் சந்தேகம் வரவேண்டிய அவசியமே கிடையாது.
இங்கே மற்ற சகோதரர்கள் பாராட்டியதைவிட, அருமை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார் – ‘‘ஜாதி இல்லை, மதம் இல்லை” என்று.
இன்றைக்கும் ஜாதி இருக்கிறது என்கிற கூட்டம் இருக்கின்றது!
ஆனால், அவர் மாறியிருக்கிறார்; இன்றைக்கும் ஜாதி இருக்கிறது என்கிற கூட்டம் இருக்கின்றது.
‘‘இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
ஜாதி இருக்கிறது என்பவர் இருப்பதோடு மட்டுமல்ல, அதைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள். காப்பாற்றவேண்டும் என்று சொல்வது மட்டுமல்ல, இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தையே மாற்றியாக வேண்டும். அதற்குப் பதில் மனுதர்மம் வந்தாகவேண்டும் என்று சொல்கிறார்கள்.
அந்த மனுதர்மம் இந்திய அரசமைப்புச் சட்ட மாக வந்தால் என்னாகும்? தந்தை பெரியார் அவர்களும், அம்பேத்கர் அவர்களும் அன்றும், திருமா போன்றவர்களும், எங்களைப் போன்றவர்களும் இன்றும் இந்தப் பணியைச் செய்யவேண்டிய அவசியமே அந்த மனுதர்மத்தால்தான்.
ஜாதிக்காக, பெற்ற பிள்ளையை கூலிப் படையை வைத்துக் கொல்கின்ற கொடுமை!
மனிதர்களுக்குள் எதற்கு பேதம் என்று கேட்டார்கள். உண்மை; அந்த சமுதாயத்தைக் காணுவதற்காகத்தான், இன்றைக்கும் நாம் போராடவேண்டி இருக்கிறது. இன்னமும் ஆணவக் கொலைகள் – இன்னமும் ஜாதிக்காக, பெற்ற பிள்ளையை, பாசத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, கூலிப்படையை வைத்துக் கொல்வ தற்குத் தயாராக இருக்கின்ற வெறித்தனம் இருக்கிறதே, அது ஜாதிப் பெருமையல்லவா? ஜாதி ஆணவம் அல்லவா!
மதத்தைக் காரணமாகக் காட்டி, மதம் பிடித்து அலைகிறார்கள்!
சிறுபான்மைச் சமுதாயமா? அவர்களை அலட்சி யப்படுத்துங்கள்; அவர்களை ஒதுக்குங்கள்; அவர்க ளுக்குக் குடியுரிமை கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், மதத்தைக் காரணமாகக் காட்டியவர்கள், மதம் பிடித்து அலைகிறார்கள்.
யானைக்கு மதம் பிடித்தால் ஆபத்து; மனிதர்களுக்கு மதம் பிடித்தால் அதைவிட ஆபத்தாகும். அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு திருமா அல்ல – ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்!
ஆனால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அதைப்பற்றி எடுத்துச் சொல்லும்பொழுது, ஜாதி வெறியை எதிர்ப்பதற்கு, ஒரு திருமா அல்ல – ஆயிரம் திருமாக்கள் உருவாக்கப்படுவார்கள்; வருவார்கள் என்பதற்குத்தான் இந்தப் பிறந்த நாள் கூட்டம் அடையாளமாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பு இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவேதான், இன்னமும் ஜாதியை எதிர்த்துப் போராடவேண்டும். ஜாதியை நியாயப்படுத்துகிறார்கள். அண்மையில்கூட அதற்கொரு அமைப்பும் இருக்கிறது.
வெளிப்படையாகச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார், ‘‘ஜாதி இருந்தாகவேண்டும்; ஜாதி முறைதான் நமக்குச் சிறப்பானது; மதம்தான் நம்மை உயர்த்துவது” என்று தெளிவாகச் சொல்கிறார்.
அதற்கு எதிர் குரல் கொடுக்க, ஒரு சிறுத்தை அல்ல; ஓராயிரம் சிறுத்தைகளும், புலிகளும் வேகமாக இன்றைக்கு வரும். அதற்கு எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்து காட்டுவோம் என்பதற்கு அடையாளம்தான், அத்தனை பேரையும் தனித்தனியே காட்டவேண்டிய அவசியமில்லை. ஒரு திருமாவைக் காட்டினால் போதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எழுச்சித் தமிழராக திருமா அவர்கள் இங்கே இருக்கிறார். அதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.
திருமா அவர்களுக்குக் கொள்கைப் பாலூட்டி, கொள்கைத் தாலாட்டு நடந்த இடம் பெரியார் திடல்!
எனவே, அவரைப் பாராட்டுவது, எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வதுபோல. அவரைப் பாராட்டுவது, எங்களை, நாங்களே வாழ்த்திக் கொள்வதுபோல. ஏனென்றால், அவருக்கும் – எங்களுக்கும் இருக்கின்ற நெருக்கம் இருக்கிறதே, அது சாதாரண நெருக்கமல்ல. இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் – அவருக்குக் கொள்கைப் பாலூட்டி, கொள்கைத் தாலாட்டு நடந்த இடம் பெரியார் திடல் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அதை எல்லோரும் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
எனவேதான், எங்களுக்குள் இருப்பது கூட்டணி நட்பு அல்ல – இது உறவு.
அந்த உறவு என்பது இருக்கிறதே, அது மிக முக்கியமான அடிப்படை. ரத்த உறவைவிட நான் சொன்னதைப்போல, கொள்கை உறவு மிகக் கெட்டியானதாகும்.
திருமா என்ற ஒரு தனி மனிதருக்காக அல்ல!
ஆகவேதான், திருமா அவர்களே, நீங்கள் கண்ட களங்கள் ஏராளம்; காணவேண்டிய களங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எனவே, நீங்கள் வாழவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே, அது திருமா என்ற ஒரு தனி மனிதருக்காக அல்ல; இந்த சமுதாயம் வாழவேண்டும்; இந்த சமுதாயம் விடியலைப் பெற்றாகவேண்டும்; இந்த சமுதாயம் எழுச்சிப் பெறவேண்டும்.
இன்றைக்கு உலகில் எங்கேயாவது தீண்டப்படாத வர்கள், நெருங்கக்கூடாதவர்கள், பார்க்கக்கூடாதவர்கள் என்று இருக்கிறதா? நீங்கள் எல்லாம் நினைக்கலாம், இதை ஏன் இப்பொழுது பேசுகிறார் என்று.
வெளிநாடுகளுக்கும் ஜாதி ஏற்றுமதியாகி இருக்கிறது!
படித்துவிட்டு நம்மவர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். படிப்பைப் பொதுவுடைமையாக்கினார்கள்; கல்வி நீரோடையாகப் பாய்ந்தது; சமூகநீதி வந்தது – அந்த சமூகநீதியினால், வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள். இங்கே சிந்தனைச் செல்வன் அவர்கள் சொன்னதைப்போல, அந்த வாய்ப்புகள் எல்லாம் கிடைத்திருக்கின்றன. ஆனால், இவர்கள் அங்கே போவதற்கு முன்னால், ஜாதி போயிருக்கிறது. அங்கே ஜாதியை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டத்திற்கு இன்னமும் இருக்கிறார்கள்.
அண்மையில் வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. அங்கே ஜாதி பிறக்கவில்லை; ஆனால், இங்கிருந்து சென்றவர்கள், எதை ஏற்றுமதி செய்யக்கூடாதோ? அதை ஏற்றுமதி செய்து, அங்கே வழக்கு மன்றத்தில், ஜாதி வழக்குப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள்.
சமத்துவம், சுயமரியாதை – வெறுப்பு அரசியல் அல்ல!
எனவே, இது உலகளாவிய இயக்கமாக வேண்டும். இன்றைக்கு ஜாதி ஒழிப்பு இயக்கம் – மனிதநேயத்தை, சுயமரியாதையை, சமத்துவத்தை உருவாக்கவேண்டும்.
சமத்துவம் – வெறுப்பு அரசியல் அல்ல.
சுயமரியாதை – வெறுப்பு அரசியல் அல்ல.
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் சமூகநீதி.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடினார்கள்.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’
அப்படி கொண்டாடிய நேரத்தில், சமத்துவம், சமூகநீதி இவையெல்லாம் இருக்கின்ற காலகட்டத்தில், அதற்கு என்ன விளக்கம் என்று சொல்கின்ற நேரத்தில், ஒரே ஒரு வரியில் சொன்னார், ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று.
யாருக்கும் வஞ்சனை கிடையாது; யாருக்கும் ஆதிக்கம் கிடையாது. அனைவருக்கும் அனைத்தும் – யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பரந்த விரிந்த ஒரு தத்துவத்திற்கு எதிரானதுதான் ஜாதி, வருணாசிரம தர்மம், மதவெறி, ஜாதி வெறி.
ஆகவேதான், அவர்கள் பெண்களைக்கூட, அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும், அவர்களுடைய அமைப்பு முறையில் இருக்கின்ற உயர்ஜாதி – கீழ்ஜாதி என்றாலும், அந்தப் பெண்களையும் ‘‘நமோ” சூத்திரர்கள் என்றுதான் முத்திரை குத்தினார்கள். பெண்களும் படிக்கக்கூடாது, உத்தியோகத்திற்குப் போகக்கூடாது என்றார்கள்.
அண்ணல் அம்பேத்கர் ஏன் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்?
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சட்ட மேதை யாக இருந்து அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்து, பிறகு சட்ட அமைச்சராகி, வழிகாட்டிக் கொண்டி ருக்கின்ற நேரத்தில், இந்து சட்ட திருத்த மசோதா என்று (இந்து கோடு பில்) வந்தபொழுது, அவர் ஏன் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்?
தனக்கு முக்கிய இலாகா கிடைக்கவில்லை என்ப தற்காகவா? தனக்குப் பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவா? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பதவியை விட்டு விலகினார்?
இளைஞர்களே, தெரிந்துகொள்ளுங்கள். இன்றைக்கு ஒரு கட்சியிலிருந்து, இன்னொரு கட்சிக்குச் செல்லும்பொழுது, தலைமையை மய்யப்படுத்துகிறார்கள். ஆனால், அம்பேத்கர் அவர்கள், மகளிருக்குச் சொத்துரிமை மசோதாவைக் கொண்டு வந்தார்.
இந்து சமுதாயத்தில் இருக்கின்ற, இந்து மதத்தில் இருக்கின்ற ஆண்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை என்று இருந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க, பெண்களுக்கும் சொத்துரிமை தரவேண்டும் என்கிற மசோதாவைக் கொண்டு வந்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் முதல் கொள்கை!
பிறவி பேதம் என்று சொல்லுகின்ற பொழுது, சுயமரியாதை இயக்கத்தின் முதல் கொள்கை என்று வருகின்றபொழுது, அந்தப் பிறவி பேதத்திற்கு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார்.
பிறவி பேதம் என்றால், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்பது மட்டும் பிறவி பேதமல்ல; ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவள் என்ற பேதத்தையும் முதுகெலும்பை முறிப்பதுபோல, முறிக்கவேண்டும்; அந்தப் பேதத்தை அகற்றவேண்டும் என்று சொன்னார்.
அந்தப் பேதத்தை அகற்றுவதற்கு, அன்றைய ஸநாதனம் ஒப்புக்கொள்ளவில்லை, நாடாளுமன்றத்தில். பிரதமராக இருந்த நேருவால்கூட உதவி செய்ய முடியவில்லை.
ஆண் – பெண் பேதம் இருக்கிறது என்று சொன்னால், நம்முடைய நாட்டில் நீண்ட காலமாக இருக்கின்ற அந்த மூடத்தனம், பழமொழியில்கூட என்ன சொன்னார்கள், ‘‘ஆஸ்திக்கு ஓர் ஆண்; ஆசைக்கு ஒரு பெண்” என்று.
ஆசைக்கு மட்டும் பெண்; ஆஸ்திக்கு ஆணாம். இதை மாற்றிக் காட்டிய இருபெரும் தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும். அந்தப் போராட்டம் இன்றைக்கும் தொடர்கிறது. அதற்கு மிகப்பெரிய திருப்பம் உண்டானது, திராவிடர் இயக்கத்தினால்.
அம்பேத்கர் கண்ட கனவை நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர்!
அம்பேத்கர் எதைப்பற்றி கனவு கண்டாரோ – எந்தக் கருத்தை தமிழ்நாட்டில் முதலில் கலைஞர் அவர்கள் சட்டம் செய்தாரோ – அதையே யு.பி.ஏ. என்று சொல்லக்கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய ஆட்சியில், தி.மு.க. 2006 ஆம் ஆண்டில் அங்கம் வகித்தபொழுது, அம்பேத்கர் எந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்று மனம் நொந்து போனாரோ, அந்தக் கருத்தை செயல்படுத்தக் கூடிய சட்டம் உருவாக்கப்பட்டது. இவை போன்றவற்றிற்கு வழிகாட்டக் கூடிய பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு; பெரியார் மண்ணுக்கு உண்டு; சமூகநீதிக்கு உண்டு.
அப்பொழுதுதான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்ற சட்டம் வெற்றி பெற்றது. காரணம், போராட்டம்!
எனவேதான், போராடவேண்டிய நேரத்தில் போராடவேண்டும். வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்.
திருமாக்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்!
எனவேதான், திருமாக்கள் வாழவேண்டும்; திருமா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம்.
நாடாளுமன்றத்தில் திருமா அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தால், நடுங்குகிறார்கள். சிறுத்தையைக் கண்டால், நடுங்குவார்கள். நாடாளுமன்றத்திற்குள்ளேயே சிறுத்தை வந்து விட்டதே என்று. இந்த சிறுத்தை சாதாரணமான சிறுத்தை அல்ல.
சிதம்பரத்தில், பழைய நந்தன் உள்ளே போக முடியவில்லை. ‘‘சிதம்பரம் போவேனா, தரிசிப்பேனா?” என்று பாட்டுப் பாடியதோடு சரி, இசை வல்லுநர்களுக்குத் தெரியும்.
புரட்சி நந்தனைக் கண்டு அவர்கள் நடுங்குகிறார்கள்!
ஆனால், இந்த நந்தன், புரட்சி நந்தன். அதே சிதம்பரத்தில் வென்று காட்டி, நாடாளுமன்றத்திற்குள்ளே போன நந்தன். எனவேதான், இந்தப் புரட்சி நந்தனைக் கண்டு அவர்கள் நடுங்குவதில் நியாயம் இருக்கிறது – அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதன் காரணமாகத்தான், நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து, சமூகநீதி காக்கின்ற போராட்டத்திற்கு வரவேண்டும் – களத்தைத் தயாரித்து வைத்திருக்கின்ற நேரத்தில், இன்னும் நம்முடைய பணிகள் முடியவில்லை.
திருமா வாழ்க!
ஜாதி ஒழிக!
மதவெறி ஒழிக!
மனிதநேயம் பொங்கட்டும்!
மதவெறியை மாய்ப்போம் –
மனிதநேயத்தைக் காப்போம்!
உங்களைப் பாராட்டுவதற்காக கொள்கைப்பூர்வமாக இங்கே வந்திருக்கின்றோம்!
உங்களைப் பாராட்டுவதற்காக கொள்கைப்பூர்வமாக இங்கே வந்திருக்கின்றோம்; உங்கள் வாழ்க்கை என்பது இருக்கிறதே, அது உங்களுக்காக அல்ல; சமு தாயத்திற்காக – அடுத்தத் தலைமுறையின் எழுச்சிக்காக – நீண்ட காலம் வாழுங்கள் – உடல்நலத்தைப் பாது காத்து வாழுங்கள் – சிறப்பாக வாழுங்கள் என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அறிவுரை அல்ல – உறவு உரை!
இந்த நேரத்தில் ஒன்றை உங்களுக்கு அறிவுரையாக அல்ல – உரிமை, உறவு உரையாக சொல்கிறேன். இது ஒரு புதிய சொல் – உறவு உரை.
உங்களைப்பற்றி ஏடுகளில் புகழ்மிக்க செய்தி கள் வருகின்ற நேரத்தில், எப்படியாவது கலகம் மூட்டவேண்டும்; எப்படியாவது சிண்டுமுடித்தலை செய்யவேண்டும் என்று பல வகையில் மிகத் தெளிவாக பல கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, நீங்கள் நடக்கவேண்டிய நேரத்தில், கவனமாக நடக்கவேண்டும். உங்களுக்கு நாங்கள் கேடயமாக இருக்கின்றவர்கள். நீங்கள் வாளாக இருந்தால், நாங்கள் கேடயமாக இருப்பவர்கள். ஆகவே, எச்சரிக்க வேண்டியது எங்களுடைய வேலை.
உங்களுடைய வெற்றியைத் தடுக்க முடியாதவர்கள்;
குறுக்கு வழியிலே வந்து கொண்டிருக்கிறார்கள்!
எங்கெங்கெல்லாம் கண்ணிவெடி இருக்கிறது – ஏமாந்துவிடக் கூடாது – இந்த நேரத்தில், அரசியலிலே உங்களுடைய வெற்றியைத் தடுக்க முடியாதவர்கள்; குறுக்கு வழியிலே வந்து கொண்டிருக்கிறார்கள்; எப்பொழுதுமே அவர்கள் நேர் வழியில் வந்ததாக வரலாறே கிடையாது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், உரிமையோடு உங்களுக்குச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டு இருக்கின்றோம். எனவேதான், நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது – எல்லாத் துறைகளிலும்.
ஏதாவது ஒரு கேள்வி கேட்டு, அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால், அதையே பெரிதாக்கி, மிகப்பெரிய அளவிற்கு ஆக்குவார்கள்.
ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி” என்று. ‘பெருமாள்’ அல்ல; ‘‘பெரும் ஆள்.”
பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்!
ஆகவே, நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய பாதுகாவலன் என்ற முறையிலும், உங்களுக்காக இருக்கின்ற பெரியார் திடல், எப்பொழுதும் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்கிற காரணத்தினாலும், உங்களுடைய பிறந்த நாள் விழாவில், இதைச் சொல்லவேண்டியது எங்களுடைய கடமை.
ஏனென்றால், உங்களை நேரிடையாகக் களத்தில் சந்திக்க முடியாதவர்கள் – கீழே குழிதோண்டலாமா? என்று பார்க்கிறார்கள்; கண்ணிவெடியை வைக்கலாமா? என்று பார்க்கிறார்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!!