‘இருட்டறையில் உள்ளதடா உலகம் – ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’ என்று ஆவேசத்துடன் கேட்டார் நமது புரட்சிக் கவிஞர்.
உலகில் எங்குமில்லாத ஒரு மனித உரிமை பறிப்பு தான் ஜாதி என்ற வர்ண தர்ம அமைப்பு!
மனிதர்களைப் பல கூறுகளாக்கி, அவர்களை மிருகத்தினும் கீழான நிலைக்குத் தள்ளி அதனை சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்தும், பரப்பியும் வருகின்றனர்.
இந்த ஜாதி – வர்ணம் இவ்வளவு காலமாக நீடித்து நிலைத்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு எது முக்கியமான அடிப்படை என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்,
ஹிந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் வேதமதம்; ஆரிய மதமும் தான். எப்படியெனில், அந்த வேதங்களை கடவுள்கள் கூறியதாகவும், அவைகள் தாமே மேலே இருந்து ஓதப்பட்டவை என்றும் பொய்மையைப் பரப்பி, வேதங்களை எவரும் கேள்வி கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும்; நம்பாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்றும் பயமுறுத்தி, மூளைக்கு விலங்கிட்டு, நால்வருண தர்மத்தையும், ‘அவர்ணஸ்தர்களாக’ பஞ்சமர்கள் – அதற்கும் கீழே அத்துணைப் பெண் குலத்தவரும் ‘நாமோ சூத்திரர்கள்’ என்ற முத்திரையுடன் அழைக்கப்பட வேண்டும் என்று படிநிலை பேதத்தை (graded inequality) உருவாக்கி ஆணி அடித்துள்ளனர்.
வேதங்களில் ரிக்வேதத்தின் புருஷ சூத்தத்தில் இந்த வர்ணதர்ம – குலதர்மத்தை எழுதியதோடு, வேதங்களின் அடிப்படையில் – ஹிந்து மதத்தில் ஸ்மிருதி, சுருதி என்றும் ஏற்படுத்தினர்.
அதில் ஒரு சட்ட வலிமையை விட மிக சக்தி வாய்ந்ததாக “மன்னர்களின் ஆட்சி முறையில், மனு(ஸ்மிருதி) முறைப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும்; இன்றேல் அடுத்த ஜென்மத்தில் இவர் பிறக்கும்போது ராஜாவாக முடியாது” என்று கூறி, நம்ப வைத்து, மன்னர்களை ஜாதி முறை வர்ணதர்மத்தின் காப்பாளர்களாக்கி விட்டனர்!
அது மட்டுமா?
மஹாபாரதத்தின் ஒரு கிளையாக சித்தரிக்கப்பட்டு பிற்காலத்தில் நுழைக்கப்பட்ட ‘பகவத் கீதை’ நூலில் பகவான் கிருஷ்ணரே,
“சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்”
“நால்வர்ண ஜாதிகளை நானே படைத்தேன்”
“அதன்படி விதித்த ஜாதி தர்மத்தை, நானே சுயதர்மா என்பதை, நானே நினைத்தாலும் மாற்றவே முடியாது” என்று கூறி,
“வேதவாக்கைத் தாண்டி
கடவுள் ஏற்பாடு என்பதையும் தாண்டி
அந்தக் கடவுளே பார்த்தாலும் கூட
அத் தர்மத்தை மாற்றவே
முடியாது” என்று எழுதி
அடிமைகளாகவே இருப்பதை
‘தலையெழுத்து’ என்று கீழ் ஜாதியினரை நம்பவும் வைத்தனர்.
இந்த ஜாதி முறை (caste system) மனிதத்தைப் பாதித்தது என்பது எப்படி?
‘Dehumanise’ – மனித நிலையிலிருந்து கீழ் நிலைக்கு – மிருகங்களை விடவும் மிகவும் மோசமான நிலைக்கு நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி, ஒட்டு மொத்தப் பெண்கள் ஆகிய மிகப் பெரும்பாலோரை இழிவுபடுத்தினர்!
எடுத்துக்காட்டாக,
அய்ந்தறிவு பிராணிகள் – செல்லப் பிராணிகளான நாய், பூனை முதலியவற்றைத் தடவிக்கொடுத்து, முத்தம் கொடுத்து, கொஞ்சிக் குலாவும் உயர்ஜாதி மனிதர்கள் – உழைக்கும் மக்களாகி, சமூகத்தின் இன்றியாமையாத பணி செய்யும் அத்துணைத் தொழிலாளர்களையும் சூத்திரர்கள் “வேசி மக்கள்” என்று மனுதர்மம் கூறுவதை சட்டமாக்கி, சட்டப்படி அந்தப் பெயரை ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசின் ஆவணங்களில் பதிய வைத்துப் பாதுகாத்தனர்.
இன்னும் கோயில், கருவறைக் கர்ப்பக்கிரகங்கள் முதலியவற்றுள் சென்று கடவுளை வணங்கும் உரிமை, பூ+செய் செய்யும் உரிமையற்றவர்களாகவே ஆக்கி வைத்தும்,
தீண்டப்படாதவர்
நெருங்கக்கூடாதவர்
பார்க்கவே கூடாதவர்
இம்மூன்று நிலையில் உள்ளவர் தொடுவது கூட மிகப்பெரிய தவறாகும், ‘தீட்டு’ ஆகி விடும் என்று மானமும் அறிவும் அற்றவர்களாக்கி, நடைமுறைப்படுத்தி வந்தார்கள், வருகிறார்கள்.
இந்த ஜாதி முறை – பிறவி இழிவு உள்ளே வந்து புகுந்து, கிறித்தவ மதம் போன்றவற்றிலும் கூட ஊடுருவி, சுடுகாடு, இடுகாடுகளில் கூட பேதத்தை இன்னமும் நடைமுறைப்படுத்துகின்றனர்.
எதைக் கொடுத்தாலும் கல்வி தரக்கூடாது இந்தக் கீழ்ஜாதியினருக்கு என்பதை கட்டளையாக்கி, குலதர்மத்தை – கோலோச்சச் செய்து, பிறவி கல்விக் கண்களைப் பறித்துத் தற்குறிகளாக்கி, அவர்கள் முதுகில் இன்று வரை சவாரி செய்து வருகின்றனர்.
இந்த பிறவி அடிமைத்தனம், பிறவி அவமானம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்ததை, அதன் மூலவேர், ஆணி வேரைத் தோண்டி அழித்தால் ஒழிய, சமூக சமத்துவ சம உரிமை, சமவாய்ப்புத் தோன்றவே தோன்றாது என்று கண்டறிந்த சமூக விஞ்ஞானத்தின் பெயர்தான் ‘சுயமரியாதை இயக்கம்’ அந்த சமூக விஞ்ஞானிதான் – தந்தை பெரியார்!
(நாளையும் தொடரும்)