கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி வகிக்க முடியாதபடி செய்வதற்கு பொப்பிலி ராஜாவும், காங்கிரஸ் கட்சியாரும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்களாம். இவ்வாறெல்லாம் கூறி “ஜனநாயகம்” பிரலாபிக்கிறது. “ஜனநாயகம்” கூறுவதெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒரு கேள்வி, “எனக்கு ஜில்லா போர்டு தலைவர் பதவியும் வேண்டாம். மந்திரி பதவியும் வேண்டாம். பொது ஜன சேவையே எனக்கு முக்கியம்” என ஜனநாயகக் கட்சித் தலைவர் கூறியிருப்பதாக அப்பத்திரிகையே விளம்பரம் செய்திருக்கையில், ஜில்லா போர்டு நிருவாக பதவியைப் பற்றி “ஜனநாயகம்” ஏன் கவலைப்பட வேண்டும்? சேவை செய்யப் பிறந்தவர்களுக்குப் பதவி மோகம் ஏன்? ஜில்லா போர்டு நிருவாகப் பதவிகளை ஏற்காமல் சேவை செய்ய வேறு வழிகளில்லையா? ஜனநாயகக் கட்சித் தலைவர் விரும்பாத நிருவாகப் பதவிகளை யார் வகித்தால் என்ன? “ஜனநாயகம்” கூறிக் கொள்கிறபடி, “அழிந்த நந்தவனத்தில் ஆடு மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன?’’
– ‘விடுதலை’- 5.12.1936