பொது சிவில் சட்டம் : செல்வப் பெருந்தகை கண்டனம்

viduthalai
4 Min Read

சென்னை, ஆக.17- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:-
சுதந்திர நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார்.

இதை நிறைவேற்றினால்தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அரசமைப்புச்சட்டம் தயாரித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்தியலை தொடர்ந்து புறக்கணிப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 1950களில் இந்து தனிநபர் சட்டங்களில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் விரும்பினார்.

அவரது நோக்கத்தை பண்டித நேருவால் உடனடியாக நிறைவேற்ற முடியவில்லையென்றாலும் 1955இல் இந்து தனிநபர் சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு என்று தனித்தனி சட்டங்களாக 1955இல் பிரதமர் நேரு நிறைவேற்றி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கனவை நனவாக்கினார்.

மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிறது

இந்து தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தம் தேவையென்று டாக்டர் அம்பேத்கர் 1949இல் கூறியபோது அதற்கு எதிராக 79 கண்டன பொதுக்கூட்டங்களை ஆர்.எஸ்.எஸ். நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்து தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்களை எதிர்த்தவர்கள், பொது சிவில் சட்டம் தேவை என்று இதுவரை பேசியவர்கள் தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று பேசுவது மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலாகும்.

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பதுங்கு திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடி விரும்புகிறார். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தங்களான பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் உறுப்பு 370அய் நீக்குவது ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்கனவே நிறைவேற்றி விட்டார். இப்போது மூன்றாவது கோரிக்கையான பொது சிவில் சட்டம் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.

பா.ஜ.க.வின் இரட்டை வேடம்

பிரதமர் மோடி பேசுகிற பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மாநிலமாக பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது. இதில் மலைவாழ் பழங்குடியினர் சேர்க்கப்படவில்லை. இதன்மூலம் பாரம் பரியமான பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களை பாதுகாக்க வேண்டு மென்று பா.ஜ.க. கூறுவது அதன் இரட்டை வேடத்தை உறுதிப்படுத்துகிறது. அதேபோல, மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடு பட்டிருக்கிறது. இதை தேசிய அளவில் வலியுறுத்துகிற வகையில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

தனித்தன்மைகளை
சிதைக்கக் கூடாது!

பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட 21ஆவது சட்ட ஆணையம் தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் குறித்து 31 ஆகஸ்ட் 2018இல் வெளியிட்ட அறிக்கை யில் பொது சிவில் சட்டத்தை அது ஏற்றுக் கொள்ளவில்லை. பல்வேறு வேறுபட்ட கலாச்சாரங்களை மதித்து கொண்டாட வேண்டுமே தவிர, பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் அதனுடைய தனித்தன்மைகளை சிதைக் கக் கூடாது.

பல்வேறு மதங்களுக்கிடையே இருக்கிற வேறுபாட்டை பொது சிவில் சட்டம் மூலம் அகற்றுவது தற்போது அவசியமோ, தேவையோ இல்லை என்று அந்த அறிக்கை தெளிவாக கூறியது. பல்வேறுவிதமான தனித்துவமான கலாச்சாரங்கள் இருப்பது வேறுபாடுகளை வளர்க்கும் என்று கூறுவது தவறான கருத்தாகும். இதற்கு மாறாக இதுதான் இந்திய ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது என்பதை பிரதமர் மோடி உணர தயாராக இல்லை.

மக்கள் பாடம் புகட்டினார்கள்

கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறியது. ஆனால், அதை நிறைவேற்றுகிற வகையில் பா.ஜ.க.வுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மையை கொடுக்காமல் பாடம் புகட்டினார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிற அய்க்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேச கட்சியும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை. இந்நிலையில் மதச்சார்பற்ற சிவில் சட்டம் பற்றி பிரதமர் மோடி பேசுவது அதை நிறைவேற்றுவதற்கு காலதாமதம் ஆனாலும், அதைப் பற்றிய விவாதத்தின் மூலம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்த கடந்த கால பா.ஜ.க.வின் முயற்சியின் நீட்சி யாகவே இதை கருத வேண்டும்.

மோடி தன்னை திருத்திக் கொள்ளவில்லை!

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள அவர் தயாராக இல்லை. குஜராத் முதல்-அமைச்சராக இருந்து எத்தகைய நோக்கத்திற்காக செயல்பட்டாரோ, அதை தேசிய அளவில் நிறைவேற்ற வேண்டுமென்று அவர் முற்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி செயல்படுவதை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், வேற்றுமையில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிற நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *