– பேராசிரியர் முனைவர் பழனி.அரங்கசாமி
மூவாயிரம் கல் தொலைவை முனைப்புடன் கடந்து
மூவா மருந்தாக ஏவாத தொண்டர் படை
எக்கணமும் எங்கணுமே பக்குவமாய்ப் பணி புரிய
தலைவர்க்குத் தலைவராய்த் தமிழகத்தில் வலம் வந்தார்.
தளர்ந்த நடை ஒதுக்கித் தளராத சிந்தையுடன்
வெற்றி முரசு கொட்டிடவே வீரமொடு வலம் வந்து
மாற்றார் வியந்திடச் சொல் மழை பொழிந்திடக்
கற்றோரும் மற்றோரும் களிகூர்ந்து மிக மகிழ்ந்தார்.
வீரமணி நாத ஒலி விண்ணதிர முழங்கிட
மண்ணுலகு வாழுமட்டும் மாளாது ஒலித்திடும் காண்!
எண்ணில் பல்கோடியர் ஈரோட்டுப் பாதையினர்
கண்ணிமையாக கடமையுடன் கட்சிப் பணி புரிகின்றார்.
செங்கோல் நாட்டி விட்டால் மாட்டிடுவர் செந்தமிழர்
விலைபேசி அன்னோரை வீழ்த்திடலாம் என்றே
பகற்கனவு காணுகின்ற பார்ப்பனியக் கூட்டம்
அய்ந்து காலத் திங்களுக்குள் அடிதளர்ந்து வீழ்ந்திடும் காண்.
கோடியில் மிதந்திடும் கோமான்களை வளர்த்திட
ஏழைகள் கோடியர் ஏழ்மையில் உழன்றாலும்
பிடிபட்ட அரியணையைப் பிடித்திடலாம் என்றே
அடிபட்ட சிறுத்தையென அலைகின்றார் நாடெங்கும்.
மனு அதர்மக் கதை புலம்பி நாட்டில் மிக
ஏமாற்றிப் பிழைத்திட்ட ஏதிலிக் கூட்டம்
காமாலைக் கண்ணோடு கலங்கித் திரிகிறது
எப்படியும் டில்லியினை எட்டிப் பிடித்திடவே!
பட்டதெல்லாம் போதும் படமுடியாது இனித்துயரம்
கொட்டமிடும் கோட்டான்களைக் குவலயத்தில் அழித்திடத்
திட்டமிட்டுப் பணிபுரியும் திருவிடத்தை எக்காலும்
தொட்டாலும் முடியாது துவண்டாலும் நடக்காது.