கேள்வி 1: விடுதலை நாளைக் கொண்டாடவா ராம் ரகீமிற்கு 28 முறையும், ஆசாராமிற்கு 3 முறையும் பிணை வழங்கியுள்ளார்கள்?
– ச.மணிமாறன், திருத்தணி
பதில் 1: இது மில்லியன் டாலர் கேள்வி! பதில்தான் கடினம்!!
– – – – –
கேள்வி 2: வினேஷ் போகாட் விவகாரத்தில் அவரே தான் தீர்வு காணமுற்படவேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவியும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷா கூறியுள்ளாரே?
– வே.குமரன், மாமல்லை
பதில் 2: உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளதே! அவர் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ஆன நிலைமையில் வேறு எப்படி இருக்கும் அவர் பதில்?
– – – – –
கேள்வி 3: பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறிய ஒன்றிய அரசு பிரதமர் மோடி – பிறகு வயநாட்டிற்கு சுற்றுலாவிற்காகவா சென்றார்?
– தே.தாமோதரன், மதுரை
பதில் 3: எங்கும், எல்லாம் இரட்டை வேட மயமே!
– – – – –
கேள்வி 4: பெரும்பாலான விளையாட்டு சம்மேளனங்களில் அதற்கு சிறிதும் தொடர்பில்லாத நபர்களே தலைவர்களாக உள்ளனரே?
– சோ.கன்னியப்பன், சாலவாக்கம்
பதில் 4: அரசியல் தகுதி இருக்கோன்னோ! அது போதாதா?
– – – – –
கேள்வி 5: ‘வேர்களைத் தேடி திட்டம்’ எந்த அளவிற்குத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படும்?
– க.சாக்கியமுனி, காஞ்சி
பதில் 5: இளம் பிள்ளைகளுக்கு நல்ல பண்பாட்டு – ஒருமைப்பாட்டுக்கு விதை விதைத்து எதிர்கால பயிர்கள் செழிப்பிற்கு நிச்சயம் வழி வகுக்கும் என்பது நான் நேரில் (15.8.2024) அந்த 15 நாடுகளைச் சேர்ந்த மாணவச் செல்வர்களின் ஆர்வத்தைப் பார்த்தபோது புரிந்தது.
தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைக்கு நமது பாராட்டுகள்!
– – – – –
கேள்வி 6: 2020ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பிரதமர் மோடி காஷ்மீர் தேர்தலை நடத்துவோம் என்று செங்கோட்டையில் முழங்குகிறார்? இந்த ஆண்டாவது அங்கு மக்கள் அதிகாரம் மீளுமா?
– வே.மெய்ப்பொருள், ஈரோடு
பதில் 6: பொறுத்திருந்து பார்ப்போம்! சில மாதங்கள் தானே!
– – – – –
கேள்வி 7: எந்த முகாந்திரமுமே இல்லாமல் முதலமைச்சர், அமைச்சர்களை சிறையில் வைத்துள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே ஒன்றிய அரசின் ஏவல் துறைகளைக் கண்டித்துள்ளதே?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் 7: கண்டனம் பயன் தந்தால் நல்லது!
– – – – –
கேள்வி 8: செபி தலைவி ஊழல் விவகாரத்தில் அமைதியாக இருந்தால் எதிர்ப்புக் குரல்கள் எழுப்புவோர் அடங்கிவிடுவார்கள் என்று பதில் கூறவேண்டியவர்கள் நினைக்கிறார்களோ?
– மா.ஏகலைவன், சிவகங்கை
பதில் 8: மவுனச் சதியால் இதை மறைத்துவிடும் மமதைக்கு மரண அடி கிடைக்கும் – உரிய நேரத்தில் – உரியவர்களால்! மக்கள் மன்றம் விழித்திருக்கிறது!!
– – – – –
கேள்வி 9: இவ்வளவு குழப்பமான தேர்வு முடிவுகள் இருந்தும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வைத் தொடங்கி உள்ளார்களே?
– வே.வேங்கைமுத்து, மதுரை
பதில் 9: மூர்க்கத்தனமும், முதலைப் பிடியும் எளிதில் பாடம் கற்பதில்லை!
– – – – –
கேள்வி 10: வக்புவாரிய மசோதாவினை நிலைக்குழுவிற்கு அனுப்பியதையும் தங்களின் சாதனை என்று பா.ஜ.க. பேசுகிறதே? நிறைவேறாமல் அனுப்பப்பட்டதில் என்ன சாதனையைக் கண்டார்கள்?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் 10: வித்தைக்காரன் இடறி வீழ்ந்தால் அவருக்கு அதுவும் “வித்தை” என்று பெயர் கிட்டுமல்லவா? அந்த ரகம் போலும் இது!