உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் (குளிர் சாதனப் பெட்டி) இருக்கிறதா? அது என்ன நிலையில் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.. ஒரு சின்ன அலட்சியம் நீங்கள் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத சிக்கலை உங்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வெங்கடேஷ் என்பவரது வீட்டில் உள்ள பழைய குளிர் சாதனப் பெட்டியின் காரணமாக என்ன நடந்தது தெரியுமா.. தயவு செய்து அலட்சியம் வேண்டாம். இதை பாருங்கள்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகர் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு சுமார் 3 அடுக்கு தளத்துடன் கூடிய வீடு ஒன்று உள்ளது. இங்கு கடந்த மே மாதம் ஒரு விபத்து நடந்தது எப்படி என்றால், அவரது வீட்டில் இரண்டாவது தளத்தில், திடீரென குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவால் வீடே தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக, முருகன் தனது குடும்பத்தி னருடன் வீட்டிலிருந்து வெளியேறினார். மேலும், உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை விரைவாக அணைத்தனர். தீப்பற்றி வீடு எரிந்ததால் மற்ற பொருட்களுக்கும் பரவி தொலைக்காட்சி, சொகுசு நாற்காலிகள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதிக்கு மின் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து வெறும் 3 மாதத்தில் அடுத்ததாக ஒரு நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
அதேபோன்றே கலைஞர் கருணாநிதி நகர், கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்த 43 வயதாகும் வெங்கடேஷ், அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டி அருகே வெங்கடேஷ் படுத்துத் தூங்கினார். அப்போது குளிர் சாதனப் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. இது தெரியாமல் வெங்கடேஷ் புரண்டு படுக்கும் போது அவரது கை, குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் உரசி இருக்கிறது.
இதில் மின்சாரம் தாக்கியதில் வெங்கடேசன் அலறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய கணவரை மீட்டு சென்னை அருகில்
உள்ள இ.எஸ்.அய். மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்துபோனார்.
இரண்டாவது நிகழ்வில் சின்ன அலட்சியம் தான் உயிரையே பறித்துள்ளது. பழைய குளிர் சாதனப் பெட்டியில் மின்சாரக் கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படி ஏதாவது நடந்தும், அதனை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட விபத்து ஆகும். பொதுவாக குளிர் சாதனப் பெட்டிகள் இடைவிடாமல் ஓடும். இந்த குளிர் சாதனப் பெட்டிகள் வெடிப்பதற்கு முக்கிய காரணம், அதன் கம்ப்ரசர் தான். இது யூனிட்டின் பின்புறத்தில் அமைந்திருக்கிறது.
ஒரு பம்ப் மற்றும் மோட்டாரைக் கொண்டுள்ள கம்ப்ரசர் குளிர்பதன வாயுவை அதன் (சுருள்) பைப்புகள் வழியாகத் தள்ளும். இந்த வாயு குளிர்ந்து திரவமாக மாறும்போது, குளிர்சாதனப்பெட்டியில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி, உள்ளே இருக்கும் அனைத்து பொருட்களையும் குளிர்விக்கும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் குளிர்பதனமானது அழுத்தத்திற்கு உள்ளாகி நகரும் போது, குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் மிகவும் சூடாகும் வாய்ப்பு உள்ளது.
இது நிகழும்போது, அது மின்தேக்கி சுருள்களை (Pipe) சுருங்கச் செய்துவிடும். இது வாயுவை வெளியேற்றுவதைத் தடுக்கிறது. அழுத்தப்பட்ட சுருளுக்குள் அதிக வாயு குவிவதால், காலப்போக்கில் அழுத்தம் ஆபத்தான வெடிப்பை ஏற்படுத்தும். குளிர்சாதனப் பெட்டியிலிருத்து (Fridge) தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு உள்ளதா, சரியாக தண்ணீர் வெளியேற வேண்டும். அவ்வப்போது ஃபிரீசரில் உள்ள பனிக்கட்டியை குளிர்சாதனப் பெட்டியை ஆஃப் செய்து நீரை வெளியேற்றுவது நல்லது.
மின் துண்டிப்பு ஏற்படும் போதும், பிரிட்ஜ் ஆஃப் செய்த போதும் நீர் வெளியேறும் பகுதியை சோதனை செய்வது மிகவும் நல்லது. நீர் வெளியேறி கம்ப்ரசர் மீது விழும் வகையில் கண்டிப்பாக விட்டுவிடக்கூடாது. இதனால் வயர் சாட் சர்க்யூட் ஆக வாய்ப்புள்ளது. மின்னழுத்தம் ஏற்ற இறக்கங்களை தடுக்கும் வகையில் ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது நல்லது.