நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா
புதுடில்லி, ஆக. 11 நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மோடி மம்தா பயப்பட வில்லை, ஸ்டாலின் பயப்படவில்லை, அகிலேஷ் பயப்படவில்லை. அவர்கள் உறுதியுடன் தங்கள் கருத்துகளை வைக்கின்றனர்.
ஆனால், விசுவகுரு என்று தன்னை தனது கட்சிக்காரர்கள் அழைக்கட்டும் என்று ஆசையோடு காத்திருக்கும் மோடி நாடாளுமன்றத்திற்கு வர பயப்படுகிறார் என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதன் முழு விபரம் வருமாறு:
நாடாளுமன்றத்தில் மோடி வருவதில்லை, அவரை வரவழைக்க ஒரு வழியாகத்தான் நம்பிக்கையில்லா தீர்மானம், ஏன் அவரை இங்கே வரவைக்கவேண்டும் மணிப்பூரில் பெரும் வன்முறை நடக்கிறது., காவல் துறையே வன்முறையாளர்களுக்கு உதவுகிறது.
இது எங்கும் பார்த்திராத கொடுமை ஆகும். அங்கே பாஜக அரசு, ஒன்றியத்திலும் பாஜக அரசு, இருப்பினும் அந்த வன்முறைகளைத் தடுக்க முடிய வில்லை.
மோடி கூறுகிறார், இரட்டை எஞ்ஜின் அரசு என்று; ஆனால், மணிப்பூரில் இரண்டு எஞ்ஜின்களுமே பழுதாகி விட்டது, அங்கு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அது குறித்து மோடி ஒரு வார்த்தைக் கூட பேசமறுக்கிறார். ராஜஸ்தானில் நடக்கிறது, சத்தீஷ்கரில் நடக்கிறது, மேற்குவங்கத்தில் நடக்கிறது என்கிறார்கள், ஆனால், அரியானா குறித்து பேச மறுக்கின்றனர். இங்கும் இரட்டை எஞ்ஜின் கவர்மெண்ட் தானே.. நாங்கள் இந்த வன்முறைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று தானே கேட்கிறோம், மக்கள் கேட்கின்றனர். ஆனால், மோடி குறைந்த பட்சம் மணிப்பூர் வன்முறைதொடர்பாக நாங்கள் என்ன செய்கிறோம் என்றுகூட பேச அஞ்சுகிறார். இவர்கள் ‘இந்தியா’ கூட்டணியைப் பற்றி பேசுகின்றனர். ‘இந்தியா’ கூட்டணியில் மம்தா பயப்படவில்லை, ஸ்டாலின் பயப்படவில்லை, அகிலேஷ் பயப்பட வில்லை. ஆனால், மோடி அவர்களின் கருத்துகளை எதிர்கொள்ள, எதிர்கட்சியினரின் கேள்விகளை எதிர்கொள்ள பயப்படுகிறார்.
உங்களிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். ஆனால் இந்தியா முழுவதும் கூறுகிறது, கேள்விகளை எதிர்கொள்ள யார் பயப் படுகிறார் என்றால், அது மோடி மட்டுமே.. என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
அவர் பேசும் போது பாஜக உறுப்பினர்கள் ‘‘மோடி மோடி!” என்று கத்திக்கொண்டு இருந்தனர். இதனை அடுத்து மஹுவா மொய்த்ரா தனது உரையை இடை நிறுத்தி “பயப்படுகிறவர் பெயரைக் கூறுவதை விட அவரை இங்கே வரச்சொல்லுங்கள்” என்று கோபத்தோடு கூறினார்.