தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களது ஆசனவாயில் பச்சை மிளகாயைத் திணித்து அச்சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம். மனுதர்மப் படியான இந்த ஹிந்து இந்தியாவில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் சோளக்கதிர்களை வயலில் இருந்து திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 சிறுவர்களை உயர்ஜாதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுநீரைக் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் திணித்துத் தேய்த்துக் கொடுமைப் படுத்தியுள்ளனர். இவ்வாறு சித்ரவதைக்கு ஆளான சிறுவர்கள் இருவரும் 10 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இத்தகைய கொடூரமான செயலின் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அக்காட்சிப் பதிவில் ஒரு கும்பல் அந்த சிறுவர்களை பச்சை மிளகாயைச் சாப்பிட வைத்தும், பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரைக் குடிக்க வைத்தும் துன்புறுத்துவதைக் காண முடிகிறது. அவர்கள் தாங்கள் சொல்வது போலச் செய்ய வில்லை என்றால் அடித்துவிடுவோம் என்று சிறுவர்களை மிரட்டுகின்றனர். சிறுவர்கள் அங்குள்ள வயலில் சோளம் திருடியதாக குற்றம் சாட்டியே, அவர்களை பிடித்துக் கட்டி வைத்து இப்படிக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மற்றொரு தெளிவற்ற காட்சிப் பதிவில் சிறுவர்கள் தரையில் முகம் குப்புறக் கிடப்பது தெரிகிறது. சிறுவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டு, கால்சட்டை கீழே இழுக்கப்பட்டு ஒரு நபர் அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயைத் தேய்க்கிறார். வலியால் அலறும் சிறுவர்களுக்கு சிறுநீர் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட இந்த காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண் டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் சித்தார்த் மாவட்டக் கூடுதல் காவல் துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மிகவும் கொடூரமான இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங் களில் நடந்து வருகின்றன. கடந்த மாதம் பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது பாஜக இளைஞரணியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் சிறுநீர் கழித்தும், செருப்பால் அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த கொடூரம் காணொலியில் வெளியான பிறகு முதலமைச்சர் சிவராஜ் சவுகான் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து கால்களைக் கழுவி பூஜை செய்தார். இந்த நிகழ்வு நடந்த அடுத்த வாரம் “பாதிக்கப்பட்ட நபர் நான் இல்லை. என்னை பாஜகவினர் வற்புறுத்தி முதல மைச்சரிடம் அழைத்துச் சென்றனர்” என்று பா.ஜ.க.வினர் அழைத்துச் சென்ற அந்த நபரே காட்சிப் பதிவு ஒன்றில் கூறினார்.
தற்போது உத்தரப்பிரதேசத்திலும் இத்தகையக் கொடூரம் நடந்துள்ளது. இந்த கொடூரத்தை என்னவென்று சொல்வது – பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் மிகவும் கேவலமான, மிருகத்தனமான முறையில் அவர்களுக்கெதிரான கொடூரங்கள் நடைபெறு வதைக் கண்டும் மனித நேயம் உள்ளவர்கள் கொதித்து எழ வேண்டாமா? இவ்வளவுக்கும் “ஹிந்து ராஜ்ஜியம்” உண்டாக்கப் போகிறோம் என்று சொல்லுகின்றவர்கள் அந்த ஹிந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது என்றால் இவர்களின் “ஹிந்து ராஜ்ஜியம்” என்ன என்பது விளங்கவில்லையா?
உயர் ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம, மனுதர்ம சிந்தனை யோடு, ஜாதி வெறியோடு மற்றவர்களை அணுகுகிறார்கள் என்ற விவரம் புரியவில்லையா?
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர் அல்லாதார் இதைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்துப் பார்க்க வேண் டாமா? கடந்த பத்தாண்டு ஆட்சியில் இந்த பார்ப்பனீய பயங்கரவாதம் மிருகத்தனமாக தலைதூக்கி ஆட்டம் போடும் நிலையில், மேலும் அய்ந்து ஆண்டுகள் இவர்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினால் நாடு நாடாக இருக்குமா? காடாக இருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வாக்காளர்களே உஷார்! உஷார்!!