இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் அவர்கள் தலைமையில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் மிக்க சிறப்பாக நடந்தேறியது.
திருமண அழைப்புக்கிணங்கி உள் ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பந்துக்களும், வியாபாரிகளும், மில் முதலாளிகளும், உத்தியோகஸ்தர்க ளும், இயக்க அபிமானிகளும், தோழர் களுமாக சுமார், 500 பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.
திருமணத்துக்கு தபால் மூலமாகவும், தந்தி மூலமாகவும் திருவாளர்கள்: கொச்சி திவான் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், கோவை ராவ்சாஹிப் எஸ்.என். பொன் னைய கவுண்டர், எ.டி. தேவராஜ முதலி யார், குருசாமி, குஞ்சிதம், கே.ஏ.பி. விஸ்வ நாதம், ச.ம.சி. பரமசிவம், கே.கே.ஏ. பெரிய சாமி ஆகியவர்களும் மற்றும் பல தோழர் களும் தங்கள் வாழ்த்துகளை அனுப்பி வைத்தனர்.
திருமணத்துக்கென அலங்கரிக்கப் பட்ட மண்டபத்தில் காலை 9:00 மணியிலிருந்தே பிரமுகர்கள் நிரம்பிவிட்டனர். 9:30 மணிக்கு தலைவர் திரு.ஈ.வெ. ராம சாமிப் பெரியாருடன் தோழர்கள்: ஈ.வெ. கிருஷ்ணசாமி, ரங்கநாயகி, மஞ்சுளாபாய், நாகை மணி, மாயவரம் சின்னையா, டி.ஜி. வெங்கடாசலம் ஆகியவர்கள் மோட்டா ரில் வந்தனர். திருமண மண்ட பத்தில் அமைக்கப்பட்டிருந்த சிங்கார மேடை மேல் மணமக்களும் தலைவர் திரு. ஈ.வெ.ரா. அவர்களும் அமர்ந்தனர்.
பலத்த கரகோஷத்தினிடையே தலை வர், திரு.ஈ.வெ. ராமசாமிப் பெரியார் இத்திருமண வைபவத்துக்குத் தலைமை ஏற்று முகவுரையாகப் பேசுகையில், முற்கால கலியாண முறையையும், அதன் அர்த்தமற்ற சடங்குகளின் தன்மைகளை யும் பற்றி விளக்கிய பின் தற்காலச் சீர் திருத்த முறைத் திருமணம் இருக்க வேண்டியதையும், இத்திருமணம் பூரண சீர்திருத்த முறை கொண்டது என்றும் பேசினார். பிறகு மணமக்கள் தங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தைத் தனித்தனியே சபையோர் முன்னிலையில் வாசித்தனர். பின் திருமணத்துக்கு வர இயலாத பிரமுகர்களின் வாழ்த்துத் தந்திகளையும், தபால்களையும் மணமகன் வாசித்தார்.
பிறகு தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் “சீர்திருத்தத் திருமணம்’’ என்னும் பொருள்பற்றி சுமார் ஒரு மணி நேரம் தக்க ஆதாரத்துடனும் மிக்க ஹாஸ்யமாகவும், சபையோர் களிக்கவும் ஒரு சொற்பொழி வாற்றினார்.
பிறகு கோவை-ஸ்ரீ உமையாம்பிகா மில் மேனேஜிங் பார்ட்னர் மிஸ்டர் பேரெட்துரை அவர் கள் இத் திருமணத்தை ஆதரித்தும், மணமக்களை வாழ்த்தியும் சிறிது நேரம் பேசினார். பிறகு திருப்பூர் பஞ்சு வியாபாரி யும் முனிசிபல் கவுன்சிலருமான தோழர் கே.எஸ். ராமசாமிக் கவுண்டர் அவர் களும், திருப்பூர் பஞ்சு வியாபாரி தோழர் எம்.கே.கே. குமாரசாமி செட்டியார் அவர் களும், தோழர் மஞ்சுளாபாய் அவர்களும் திருமணத்தை ஆதரித்தும் மணமக்களை வாழ்த்தியும் பேசினார்கள். பிறகு மணமக்கள் சார்பில் மணமகன் தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டார். பிறகு சபையோருக்கு சந்தன தாம்பூலம் வழங்கப்பட்டது. பகல் போஜனம் மிக்க சிறப்பாக நடந்தேறியது. மாலை, மணமக்களுடன் பிரமுகர்களையும் கொண்ட பல புகைப்படம் பிடிக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு தேநீர் விருந்து நடந்தபின் தலைவர் ஈ.வெ.ரா. அவர்களும் அவரது சகாக்களும் ஈரோட்டுக்குப் பிரயாணமாயினர்.
– ‘விடுதலை’ – 9.12.1936