புதுடில்லி, ஆக.16 பிரதமா் நரேந்திர மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் வசிக்கும் மணிப்பூா் மக்களை ராகுல் காந்தி நேற்று (15.8.2024) சந்தித்துப் பேசினார். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூரில் வன்முறை காரணமாக அதனை பூா்விகமாகக் கொண்டவா்கள் கூட அங்குள்ள உறவினா்களை நேரில் சென்று சந்திக்க முடியாத சூழல் உள்ளது.
டில்லியில் அவா்களைச் சந்தித்துப் பேசியபோது தங்கள் மனவேதனையை அவா்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனா். மணிப்பூரில் உள்ள தங்கள் உறவினா்களின் பாதுகாப்பு குறித்து அவா்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். இதுதான் மணிப்பூரின் மோசமான உண்மை நிலவரம். நாம் சுதந்திர நாளை கொண்டாடும் நேரத்தில் மணிப்பூா் மக்களின் பாதுகாப்புக்காகவும் உறுதியேற்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரம் முழுமையடையும். பிரதமா் மோடி மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்திக்க வேண்டும்’ என்று ராகுல் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரின் நிலைப்பாடும்
தமிழ்நாடு அரசின் அணுகுமுறையும்
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை, ஆக.16- ஆளுநர் கூறும் கருத்துகளில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும், அரசியல் கருத்தும் வேறுவேறாகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (15.8.2024)சென்னை கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந் தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து இருக்கி றார். இந்த அழைப்பை ஏற்று ‘தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கிறோம்.
போதைப்பொருள் நட மாட்டம் அதிகம் உள்ளது என்றெல்லாம் அரசுக்கு எதிராகவும், அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் ஆளுநர் பல்வேறு கருத்துகளை கூறுகிறாரே என்று நீங்கள் கேட்டால், ஆளுநர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, அவ்வப்போதே அமைச்சர்களால் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கருத்துக்கள் என்பது வேறு, அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் தி.மு.க.விற்குஇருக்கிறது. அரசியல் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகள், கருத்தியலில் மாறுபாடுகள் இருக்கலாம், மாச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் அவருக்கு உரிய மரியாதையை முதலமைச்சர் எப்போதும் அளிக்கிறார். அவர் ஒருபோதும் அதை அளிக்க தவறியதில்லை. எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநரின் அழைப்பை நாங்கள் ஏற்று அதில் கலந்து கொள்கிறோம். ஆளுநர் பதவி என்பது ஒரு’இன்ஸ்டியூசன்’ என்ற வகுக்கப்பட்ட அமைப்பாகும். எனவே அதற்குரிய மரியாதையை முதலமைச்சர் அளிக்கிறார்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஜனவரி முதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்களில் முக்கிய மாற்றம் ரயில்வே முக்கிய முடிவு
சென்னை, ஆக.16 ஜனவரி மாதம் முதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. இது ஒருபுறம் எனில், ரயில்களில் ஏ.சி. வசதிகள் இருந்தால், பலர் கார்களில், சொந்த வாகனங்களில் பயணிக்காமல், மின்சார ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அதை கொண்டுவருவது குறித்து தெற்கு ரயில்வே பரிசீலித்து வந்தது.
இதன் காரணமாக மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரயில்வே ஆய்வு செய்தது. பின்னர், ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு செய்து பெட்டிகளை தயாரிப்பதற்கான பணியை தெற்கு ரயில்வே தொடங்கியது. சென்னை பெரம்பூரில் உள்ள அய்.சி.எப். தொழிற்சாலையில் ஏசி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
ஏ.சி. பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில்களை சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே முதற்கட்டமாக அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இதற்காக வரும் நவம்பர் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ.சி. பெட்டிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.