* சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனவுரிமை,  மாநில சுயாட்சி அடிப்படையில் இயங்குவது ‘திராவிட மாடல்’ ஆட்சி!

3 Min Read
* ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் என்பது உயிர் காக்கும் திட்டம்!
செயற்கை நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும்  
தனது ஆளுமைத் திறத்தால் முறியடித்து செயல்படும் முதலமைச்சருக்கு வாழ்த்துப் பூங்கொத்து!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் செறிவாக வழி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் விடுதலை நாள் உரையை வரவேற்று பாராட்டி, வாழ்த்துப் பூங்கொத்துக்களை அளிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்றைய ஆகஸ்ட் 15 விடுதலை நாள் விழாவில், நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் எடுத்துக்காட்டான முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாகவும், சாதனைச் சரித்திரத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்ததைக் கேட்டு, நாம் மகிழ்ந்தோம் – அதுபோல், மக்களும் மகிழ்ந்து வரவேற்பார்கள் என்பது உறுதி!

‘விடுதலை’ நாளில் ‘திராவிட மாடல்’
முதலமைச்சரின் சிறப்பான உரை!

“திராவிட மாடல் என்றால் என்ன?” என்று கேட்பவர்களுக்கு நான் பல முறை விளக்கமளித்தி ருந்தாலும், அதனை மீண்டும் ஒருமுறை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய அய்ந்தும் ஒருசேர வளர வேண்டும்.

அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!”

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

‘‘…….தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் வழித்தோன்றல் மட்டுமல்ல; அவர்கள் நினைத்த செயலைச் செய்து காட்டும் வழிவழித் தொடர்ச்சியாக நான் செயல்பட்டு வருகிறேன்.

மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலைவணங்குகிறேன்.

நீங்கள் எனக்கு அளித்து வரும் வெற்றியின் மூலமாக தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு.”

முதலமைச்சரின் இந்த உரை விசாலப் பார்வை, விரிந்த ஆளுமைத் திறனையும் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை உலகுக்குப் பறை சாற்றிய, உயரிய, தனித்தன்மை வாய்ந்த உரையாகும்!

‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் உன்னதமானது!

ஏழை, எளிய மக்கள் உடல்நலன் காக்க ‘முதல்வர் மருந்தகம்’ என்று அறிவித்துள்ள புதிய திட்டம், வரும் பொங்கல் திருநாளில் செயல்படுத்தவிருப்பதன் அறிவிப்பு பொங்கலின் சுவையைவிட இனிக்கும் – ஏழை, எளிய மக்கள் – ஜாதி மத வேறுபாடின்றி நல் உயிர் காக்கும் உயரியத் திட்டம்!

ஒருபுறம் செயற்கை நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்திட்டாலும், அதனை தனது ஆளுமை அறிவுத் திறத்தால், ‘‘தடைக்கற்கள் உண்டெனினும் அவற்றைத் தாண்டும், தாங்கும் தடந்தோள்கள் எமக்குண்டு” என்று இன்று வென்று காட்டும் நம் முதலமைச்சருக்கும், அவர்தம் புரட்சித் திட்டங்கள் பூத்துக் குலுங்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் வாழ்த்துப் பூங்கொத்தை மக்கள் சார்பில் அளிப்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்!

திராவிடம் வெல்லும் – நாளைய
வரலாறு அதைச் சொல்லும்!

சென்னை
16.8.2024

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *