செவ்வாய் கோளின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசா 2018ஆம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு “மார்ஸ் இன்சைட் லேண்டர்’’ என்னும் விண்கலத்தை அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்த புதிய பகுப்பாய்வில் நீரின் இருப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
இன்சைட் லேண்டர் விண்கலத்தில் ஒரு நில அதிர்வு அளவீட்டு கருவி (seismometer) பொருத்தப்பட்டிருந்தது. அந்த கருவி கடந்த 4 ஆண்டுகளாக செவ்வாய் கோளின் நில அதிர்வுகளை பதிவு செய்தது.
அந்த நில அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த போது, திரவ வடிவிலான நீரின் “நில அதிர்வு சமிக்ஞைகளை” விஞ்ஞானிகள் கவனித்தனர்.
செவ்வாயின் துருவங்களில் உறைந்த நீர் மற்றும் வளிமண்டலத்தில் நீராவிக்கான சான்றுகள் இருப்பதாக ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், அங்கு திரவ வடிவிலான நீர் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்த கண்டுபிடிப்புகள் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு செயல்முறைகளுக்கான கட்டுரையில் வெளி யிடப்பட்டுள்ளது.
நில அதிர்வுகளை வைத்து
நீர் இருப்பை கணித்த விஞ்ஞானிகள்
இன்சைட் லேண்டர் விண்கலம் நான்கு ஆண்டுகளாக “செவ்வாய் கோளின் அதிர்வு களை” பதிவு செய்து கொண்டிருந்தது. இதனால் செவ்வாய் கோளைப் பற்றி பல்வேறு பிரமிப்பான தகவல்கள் கிடைத்தது. 2022 டிசம்பரில் விண்கலத்தின் பணி முடிவடைந்தது.
நான்கு ஆண்டுகளில், விண்கலத்தில் இருந்த கருவியில், சுமார் 1,319 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன.
நில அதிர்வு அலைகள் எவ்வளவு வேகமாகப் பயணித்துள்ளன என்பதை அளப்பதன் மூலம், அவை எந்தப் பொருளின் ஊடாகச் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
“பூமியில் நம் நிலப்பரப்புகளில் தண்ணீர் அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பைத் தேடுவதற்கு நாம் பயன்படுத்தும் அதே நுட்பம் இது” என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் மங்கா விளக்கினார்.
செவ்வாய் கோளின் கிரஸ்டில் சுமார் 10 முதல் 20 கிமீ ஆழத்தில் நீர்த்தேக்கங்கள் இருப்பதை ஆய்வு வெளிப்படுத்தியது.
“செவ்வாய் கோளின் நீர் சுழற்சியைப் புரிந்து கொள்வது அந்த கோளின் காலநிலை, மேற்பரப்பு மற்றும் உட்புறத்தின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமானது” என்று யுசி சான் டியாகோவின் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியனோகிராஃபியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாஷன் ரைட் கூறினார்.
“ஒரு கோளின் பரிணாமத்தை பற்றிய தகவல்களை வடிவமைப்பதில் `நீர்’ மிக முக்கியமான மூலக்கூறு” என்று பேராசிரியர் மங்கா மேலும் கூறினார்.
இந்த கண்டுபிடிப்பு, “செவ்வாய் கோளின் நீர் இருப்புகள் அனைத்தும் எங்கே போயின?” என்ற பெரிய கேள்விக்கு பதிலளிக்கிறது என்று அவர் விவரித்தார்.
செவ்வாய் கோளின் மேற்பரப்பு பற்றிய இந்த ஆய்வுகள், அதன் நிலப்பரப்பில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் சிற்றலைகள் – பண்டைய காலங்களில், கோளில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்திருக்கும் சுவடுகளை பிரதிபலிக்கின்றன.
ஆனால் 300 கோடி ஆண்டுகளாக செவ்வாய் கோள் பாலைவனமாகவே உள்ளது.
செவ்வாய் கோள் அதன் வளி மண்டலத்தை இழந்த போது அதன் நீர் இருப்புகளில் சில விண்வெளிக்கு சென்றது. ஆனால், பேராசிரியர் மங்கா, இங்கே பூமியில், “நம்முடைய தண்ணீரின் பெரும்பகுதி நிலத் தடியில் உள்ளது, செவ்வாய் கோளிலும் அப்படி இருக்கலாம்” என்றார்.
செவ்வாயில் மனிதன் குடியேறுவது சாத்தியமாகுமா?
நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் அதற்கு நேரடியாக கீழே உள்ள கிரஸ்ட் நிலப்பரப்பின் அதிர்வுகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது, எனவே கோள் முழுவதும் ஆய்வு செய்யும் பட்சத்தில் இதே போன்ற நீர்த்தேக்கங்கள் மேலும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் கோளின் மேற்பரப்பில் அரை மைலுக்கு கூடுதல் ஆழமான ஒரு அடுக்கை உருவாக்கும் அளவுக்கு போதுமான திரவ நீர் இருக்கும் என்று அவர்கள் கணக்கிடுகின்றனர்.
இருப்பினும், செவ்வாய் கோளின் நிலத்தடி நீரின் இருப்பிடம் பற்றிய தகவல், அந்த கோளில் மனித குடியேற்றங்களை அமைக்கும் திட்டங்களைக் கொண்டுள்ள கோடீஸ்வரர்களுக்கு நல்ல செய்தி அல்ல, அவர்கள் அதை பயன்படுத்துவதற்கு கடின மான செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.”
“திரவ நீர் கிரஸ்ட் நிலப்பரப்பில் 10-20 கிலோ மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது” என்று பேராசிரியர் மங்கா விளக்கினார்.
“செவ்வாய் கோளில் 10 கிமீ ஆழத்துக்கு துளையிடுவது என்பது ஈலோன் மஸ்க்கிற்கு கூட கடினமாக இருக்கும்” என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கோளில் வாழ்வதற்கான பகுதிகளை தேடுவதற்கான மற்றொரு இலக் குக்கு வழிக்காட்டியுள்ளது.
“திரவ வடிவிலான நீர் இல்லாவிட்டால் நீங்கள் உயிர் வாழும் வாய்ப்பு இல்லை” என்று பேராசிரியர் மங்கா விளக்கினார்.
“எனவே செவ்வாய் கோளில் வாழக்கூடிய சூழல்கள் இருக்கும் என்றால், அது இப்போது நிலப்பரப்பின் ஆழமான பகுதியில் தான் சாத்தியம்” என்பது அவரது கருத்து.