புதுச்சேரி, ஆக.15 மாநில தகுதி வழங்கக் கோரி புதுவை பேரவையில் 15-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தகுதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, புதுவை சட்டப்பேரவையில் 15-ஆவது முறையாக நேற்று (14.8.2024) அரசு சார்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் நேற்று (14.8.2024) மாநில தகுதி கோரி, எதிர்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக உறுப்பினா்கள் நாஜிம், ஆா். செந்தில்குமார், சுயேச்சை உறுப்பினா் ஜி. நேரு ஆகியோர் தனித் தீா்மானங்கள் கொண்டு வந்தனா்.
இதன் மீதான விவாதத்தில் ஆா்.சிவா பேசியதாவது:ஒன்றியத்தில் எந்தக் கட்சி ஆட்சியானாலும் புதுவைக்கான மாநில தகுதியை வழங்குவதில்லை. மாநில அரசை ஆலோசிக்காமலேயே பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்கள்தொகை, வரையறுக்கப்பட்ட எல்லை, நிர்வாக அரசு ஆகியவை இருந்தும் மாநில தகுதியை பெறவில்லை. இதுதொடா்பாக தீா்மானம் நிறைவேற்றி, புதுடில்லிக்கு முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்.
நாஜிம் (திமுக): ஒன்றியத்தில் எந்த ஆட்சியிருந்தாலும், புதுவைக்கு மாநில அரசுக்கான அதிகாரம் தேவை.
ஆா். செந்தில்குமார் (திமுக): புதுவை ஒன்றிய பிரதேசமாகவே நீடிக்கிறது. செலவின பற்றாக்குறையைத்தான் ஒன்றிய அரசு நிதியாக வழங்க வேண்டும். ஆனால், முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்கிவருகிறது. இதனால், தனியாக கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.
பேரவைத் தலைவா் ஆா். செல்வம்: ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது, தனிக் கணக்கு தொடங்க அப்போது புதுவை முதலமைச்சராக இருந்த என்.ரங்கசாமிக்கு அழுத்தம் தரப்பட்டது. மாநில தகுதி கோரி, சட்டப்பேரவையில் 14 முறை தீா்மானங்கள் நிறைவேற்றியும், கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீா்மானம்தான் ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன், கூட்டணி ஆட்சி என்பதால் அனுப்பி வைத்தீா்களா? என்றார். காங்கிரஸ் ஆட்சியில்தான் தீா்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. தற்போது, மாநில தகுதி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கேட்டுக்கொண்டார்.
ஜி.நேரு (சுயேச்சை): சிறிய மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்ட போதும், புதுடில்லியைக் காரணம் காட்டி புதுவைக்கு மறுப்பதை ஏற்க முடியாது.
முதலமைச்சர் என். ரங்கசாமி: மாநில தகுதியைப் பெற்று தீர வேண்டும். அதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். பிரதமா், ஒன்றிய உள்துறை அமைச்சா், நிதியமைச்சா் ஆகியோரை புதுடில்லி சென்று நேரில் சந்திப்போம். மக்களவை உறுப்பினா்களிடம் மாநில தகுதியை ஆதரவளிக்க கோருவோம். மாநில அந்தஸ்தை வலியுறுத்தி அரசு சார்பில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து, உறுப்பினா்கள் தனி தீா்மானத்தை திரும்பப் பெற்றனா். பின்னா், மாநில தகுதி கோரி அரசு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீா்மான விவரம்: புதுவைக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என, 1970-ஆம் ஆண்டு தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பலமுறை பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. மாநில தகுதி கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கும் வரையில் வலியுறுத்த வேண்டும். புதுவைக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது.
இந்தத் தீா்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினார்.