மதுரையில் கடந்த 11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் எண் 5 கீழமாசி வீதியில், இரண்டாவது தளத்தில் பெரியார் மய்யம் திறப்பு விழா நடைபெற்றது.
இம்மய்யத்தில்20பேர்அமர்ந்து கலந்துறவாட குளிரூட்டப்பட்ட அறையும், அருகில் 150 பேர் அமரக்கூடிய அரங்கம், மேடை, ஒலிபெருக்கி, போர்டி யம், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்துடன் கூடிய பெரிய அறையும் உள்ளது. கடும் உழைப்பால் வாழ்வில் உயர்ந்தவரும், பணம் என்பது சமூகத்திற்கு பயன்படவேண்டும் என்ற உணர்வில் செயலாற்றி வரக்கூடியவருமான மதுரை கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் அவர்களின் கடும் முயற்சியால் மிகுந்த பொருட்செலவோடு இந்தப் பெரியார் மய்யம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரங்கத்தின் உட்புறம் தந்தை பெரியாரின் கருத்து களையும், வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களையும் உள்ளடக்கி, அதுவே வந்து வாசிப்பவர்களுக்கு ஒரு பாடம் போல அமைக்கப்பட்டிருக்கிறது. பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், சொற்பொழிவு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட பெரியார் வீரமணி அரங்கம், திராவிடர் கழக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகம் ஆகியவை ஒருங்கிணைந்த பெரியார் மய்யத்தினை திராவிடர் கழகத் துணை த்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திறந்து வைத்தார். மாவட்ட அலுவலகத்தை தி.மு.க.வின் உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர்,மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார்.
பெரியார் மய்யப் பெயர்ப் பலகையை தனம்முரு கானந்தம் திறந்து வைக்க, அவர்களின் மகன்கள் வீரமணி, இரமேஷ், மருமகள் சங்கரி, பெயர்த்திகள், தேன்மொழி, செம்மொழி ஆகியோர் பங்கேற்றனர். அடுத்து நிகழ்வின் தொடக்கமாக பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களில், மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் தந்தை பெரியார் படத்தையும், அதிமமு கழகப் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அன்னை மணியம்மையார் படத்தையும், தமிழ்ப் புலிகள் கட்சியினுடைய பொதுச் செயலாளர் பேரறிவாளன் காமராஜர் படத்தையும், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை மாவட்டக் கழகக் காப்பாளர் முனியசாமியும் திறந்து வைத்தனர். அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய திராவிட இயக்க விடிவெள்ளிகளான நடேசனார், சர். பிட்டி. தியாகராயர், டி.எம்.நாயர்,பனகல் அரசர், முத்தையா முதலியார், நாகம்மையார்,பட்டுக்கோட்டை அழகிரி, சர்.ஏ.டி பன்னீர்செல்வம், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களை, மாமன்ற உறுப்பினர் விஜயாகுரு மாவட்டத் துணைத் தலைவர் நா.முருகேசன், தனுஷ்கோடி, மு.மாரிமுத்து, மதிமுக மகபூப்ஜான், மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வப்பெரியார், அவரது மகன் இயக்கக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை தேவசன்பெரியார், வழக்குரைஞர் நா.கணேசன், திமுக சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் அருள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு செயலாளர் சுப.முருகானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, கழக சொற்பொழிவாளர் சுப.பெரியார் பித்தன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு,செயலாளர் சுப.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்விற்கு கழக மாவட்டத் தலைவர் அ.முரு கானந்தம் தலைமையேற்று உரையாற்றினார்.
அவர் தனது உரையில் இப்படி ஒரு மய்யத்தைக் கட்டவேண்டும் என்ற யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது பற்றியும், அப்படி வந்த யோசனையை நிறைவேற்றுவதற்கு மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் எப்படித் துணை புரிந்தார்கள் என்பதையும், முதன் முதலில் இந்த இடத்தை நானும், அண்ணன் செல்வம் அவர்களும் அண்ணன் நேரு அவர்களும் நேரில் வந்து பார்த்து எவ்வாறு அலுவலகத்தை உருவாக்கலாம் என்பதுபற்றி சிந்தித்துத் திட்டமிட்டதோடு, இப்படிப்பட்ட ஒரு அலுவலகத்தை திறப்பதற்குத் தன்னுடைய குடும்பத்தினர் எப்படி ஒத்துழைப்பு அளித்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.
அ.முருகானந்தம் அவர்களுக்கும், அவருடைய வாழ்விணையர் தனம் அவர்களுக்கும், மகன்கள் மருமகள் என குடும்பத்தினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பாக கவிஞர் அவர்கள் சிறப்புச் செய்தார்கள். அதைப் போல இப்பெரியார் மய்யம் சிறப்புடன் அமைய துணைநின்றதோடு, அரங்கத்தில் உள்ள அறையை குளிரூட்டப்பட்ட அறையாக்க குளிரூட்டியை வழங்கிய முருகானந்தம்அவர்களின் தம்பி வேல்முருகன், அவரது இணையர் வே.சுசிலா அவர்களது மகள் கனிமொழி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது
நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் இந்தப் பெரியார் மய்யம் எப்படி உருவானது என்பது பற்றியும், அ.முருகானந்தம் எவ்வளவு தொண்டுள்ளத்தோடு இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு விரிவான ஓர் அறிமுக உரையை அளித்தார். நிகழ்வு முழுவதையும் அவரே ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் சுப.பெரியார்பித்தன், முனைவர் வா.நேரு, கழகப் பேச்சாளர் வேங்கைமாறன் என்ற அ.வேல்முருகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் தோழர் கணேசன் ம.தி.மு.க. மகபூப்ஜான், வழக்குரைஞர் பசும் பொன் பாண்டியன், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் பேரறிவாளன்,வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத்தலைவர் பி.என்.அம்மாவாசி உள்ளிட்டோர் உரையாற்றிய பின்பு தி.மு.க.வின் உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அ.முருகானந்தம் குறிப்பிட்டார். இன்றைக்கு நம்முடைய பரம்பரை எதிரிகளைச் சமாளிப்பதற்கு கருத்துத்தான் தேவையாக இருக்கிறது அந்தக் கருத்தினை கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எனவே இந்த இடத்தில் தொடர்ந்து பயிற்சி நடப்பதற்கு நானும் முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று குறிப்பிட்டு பல்வேறு செய்திகளை எடுத்துக்கூறி உரையாற்றினார்.
தொடர்ந்து உரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், இந்தப் பெரியார் மய்யத்தைத் திறந்து வைத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், நெருக்கடி நிலை காலகட்டத்தில் சென்னையிலே தாங்கள் கூடி கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்து வாரந்தோறும் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்று இன்றைக்கு 4000 கூட்டங்களுக்கு மேல் சென்று இருக்கிறது என்று குறிப்பிட்டார். எந்த ஒரு இடத்திலும் கட்டடம் அமைவது மட்டும் முக்கியமல்ல தொடர்ச்சியான நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும், அதுவும் முக்கியம்.
தொடங்கி விடுவது யார் என்றாலும் தொடங்கி விடுவார்கள் ஆனால் தொடர்ந்து நடத்துவதில் தான் இருக்கிறது வெற்றி. அப்படி மதுரை தோழர்கள் இங்கே நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக இந்தப் பெரியார் மய்யத்தில் நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டு, தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கையிலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்க்கையிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டு மிகச் சிறப்பாக தன்னுடைய சிறப்புரையை ஆற்றினார். தோழமைக் கட்சித் தோழர்கள், தலைவர்கள் வந்திருந்து இந்த பெரியார் மய்யத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு,காரம்,பிஸ்கட், தேநீர் வழங்கப்பட்டது
மதுரை பெரியார் மய்யத்தின் உரிமையாளர் அ.முரு கானந்தம் அவர்களின் மகன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணிப்பொறுப்பாளர் அ.மு.வீரமணி நிகழ்வில் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன், உசிலை மாவட்ட கழகத் தலைவர் த.ம.எரிமலை மாவட்ட செயலாளர், பா.முத்துக்கருப்பன், தி.இத. பேரவை பொறுப்பாளர்கள் சு.சரவணன், அமர்நாத், மாவட்ட கழகத் துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ், துணை செயலாளர் க.சிவா,இளைஞரணி செயலாளர் பெ.காசி, வேல்துரை, அன்பு, பா.சடகோபன், அழகுப்பாண்டி, ச.பால்ராஜ், க.அழகர், திருமங்கலம் ப.க. பொறுப்பாளர் தங்கத்துரை, குமார், பசும்பொன் பாண்டியன், இராக்கு, கோ.கு.கணேசன், தனசேகரன், பெத்தானியாபுரம் பாண்டி, இரா.திருப்பதி, அஜிதா, மோதிலால், ரோ.கணேசன் புதூர் பாக்கியம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மதுரைத் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் ஒரு நிகழ்வாக இந்தப் பெரியார் மய்யம் திறப்பு விழா நிகழ்வு அமைந்தது.
இந்நிகழ்வில் கழக மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியின் அண்ணன் பாண்டியராஜன் கலந்து கொண்டு புதிய இடம் வாங்க ரூ.25 ஆயிரம் தருகிறேன் என்று அறிவித்து, முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். அவருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சிறப்பு செய்தார்.