சென்னை, ஆக.15 இன்று ஆகஸ்ட் 15ஆம் நாளன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26 குடியரசு நாள், மார்ச் 22 உலக தண்ணீர் நாள், மே 1 உழைப்பாளர் நாள், ஆகஸ்ட் 15 சுதந்திர நாள், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி நாள் என ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டங்களில் நடைமுறையில் உள்ள அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். அதனையடுத்து அதன் நிறை குறைகள் குறித்த தகவல்களும் பரிமாறப்படும். அடுத்து செய்ய வேண்டியவை குறித்தும் ஆலோசிக்கப்படும். இவை அனைத்தும் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் சுதந்திர நாளான இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி 12525 கிராமங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இடம் மற்றும் நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.