சென்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வியாசர்பாடி பி.சி.எம். பாடசாலையில் தோழர் தர்மதீரன் தலைமையில் மேற்படி கழகத்தின் பொதுக்கூட்டம் கூடியது. அச்சமயம் தலைவர் மனித வாழ்க்கை என்பது பற்றி ஓர் விரிவுரை நிகழ்த்தினார். பின்னர் தோழர் வி. ஆர். தாமோதரம் மனித வாழ்க்கையும், மக்கள் கடமையும் என்று பேசும்போது மக்களுக்கு மதம் அவசியம் இல்லை என்றும், வாழ்க்கைக்குக் கல்வியும், சமத்துவமும் அவசியம் வேண்டுமென்றும் பேசி முடித்தார்.
டாக்டர் எம்.மாசிலாமணி மக்கள் வாழ்க்கைக்கு இன்று மதமும், கடவுளும். முட்டுக் கட்டையாக இருப்பதால் இதை மக்கள் அவசியம் உணர்ந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், உலகத்தில் காங்கிரஸ் பேரால் புது புது பித்தலாட்டங்கள் நடக்கிறதென்றும், அதை நாம் இன்னும் அறியாமல் இருப்பதால் ஒவ்வொருவரும் நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் பேசினார்.
கடைசியாக பேசிய தோழர் தண்டபாணி மக்கள் வாழ்க்கை என்பதைப் பற்றி பேசுவதற்கு முந்தி, மிருக வாழ்க்கை இன்னது என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன். இன்று மக்களது வாழ்க்கையானது மிருக வாழ்க்கையிலும், கேவல நிலையில் இருந்து வருவது யாவரும் அறிந்த விஷயம். அதை மாற்றி அமைக்க நாம் எல்லாத்துறையிலும் முயல வேண்டும் என்றும், மக்கள் வாழ்க்கை ஒரு சில கூட்டத்தினரால் சின்னாபின்னப் பட்டுவிட்டது என்றும், கூட்டத்திற்கு வந்தவர்கள் மனது உருகும்படி பேசினார். பின்னர் தலைவரின் முடிவுரைக்குப் பின் காரியதரிசியின் வந்தனத்துடன் இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது.
– காரியதரிசி
– ‘விடுதலை’ (செய்தித் துணுக்கு)
– 25.04.1936