சென்னை, ஆக. 14- “தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை” என போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76 கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக் கின்றனர். இந்நிலையில், பேருந்துப் பயணக் கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆந்திரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே இருக்கிறது.
இந்த நிலையில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக சில அரசியல் கட்சிதலைவர்கள் வதந்திகளை நம்பி அறிக்கை விட்டிருந்தனர். இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப் பட்ட விளக்கத்தில், “பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கிறது
திருச்சி, ஆக. 14- காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட் டங்கள் முழுமையாகவும், திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் பகுதியாகவும் காவிரிப் பாசனம் பெறுகின்றன. இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப் படவில்லை. இதனால் வடிமுனைக் குழாய் வசதியுள்ள இடங்களில் மட்டும் ஏறத்தாழ 50 சதவீத அளவுக்கே குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் கருநாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், டெல்டா பாசனத்துக்காக ஜூலை 28ஆம் தேதி அணை திறக்கப்பட்டது.
சம்பா பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 14 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடிநெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். தற்போது மேட்டூர் அணை நிறைந்து இருப்பதால் வழக்கத்தைவிட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அதிகமாக சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வேளாண்மைத் துறையினர்.
டெல்டா மாவட்டங்களில் சம்பாநெல் சாகு படிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை உழுது, நடவுக்குத் தயார்படுத்தும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா பருவத்தைப் பொறுத்தவரை நீண்ட மற்றும் மத்திய கால நெல்ரகங்களான சிஆர் 1009, ஆடுதுறை 51, ஆடுதுறை 39 உள்ளிட்டவைகளை விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடப்பாண்டில் மேட்டூர் அணை நிரம்பிஇருப்பதால், கூடுதலான பரப்பில்சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. நீண்டகால விதை ரகங்களைத் தேர்வு செய்யும் விவசாயிகள், செப்டம்பர் முதல் வாரத்தில் நாற்றங்கால்களை விடத் தொடங்குவர். செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபர் மாதங்களில் முழுவீச்சில்நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
சம்பா பருவத்தில் அதிக அளவில் சாகுபடி செய்ய ஏதுவாக,பயிர்க் கடன், தரமான விதை மற்றும் உரங்கள் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனை செய்ய அரசு ஆணை
சென்னை, ஆக. 14– மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், ஜோதிலட்சுமி இணையர். இவர்களது மகள் காவியாசிறீ (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்குள்ள பெட்டி கடையில், ரூ.10 மதிப்புள்ள குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமி குடித்த குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதிபோன்ற விவரங்கள் அச்சிடப்படாததால், காலாவாதியான குளிர்பானத்தை குடித்ததால்தான் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:
சிறுமி குளிர்பானம் வாங்கிஅருந்திய பெட்டிக் கடையில்இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் 10முதல் 15 நாட்களில் வெளிவரும். அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்துஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வின்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன், தயாரிப்பு ஆலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்ததற்கான காரணம், சோதனை முடிவு வந்தபிறகுதான் தெரியவரும். அதேநேரம் மாநிலம் முழுவதும், குளிர்பான தயாரிப்புஇடங்களில் அடுத்த ஓரிரு வாரங்கள் சோதனை தீவிரப்படுத்தப்படும்.