பல ஆண்டுகளாக தூய்மைப் பணியாள ராகப் பணிபுரிந்து அவதியுற்று, வறுமையை தனது வாழ்வில் கசப்பான அனுபவங்கள் என்று கண்ட பெற்றோரின் மகளாகப் பிறந்தவர் செல்வி துர்கா என்ற இளம் மகளிர்.
தனது பெற்றோர் – குறிப்பாக தனது தந்தை, அப்பணியில் கடுமையாக உழைத்துப்பட்ட பல்வேறு சங்கடங்களையும், வாழ்க்கைத் துன்பங்களையும் கண்டு மனவேதனைப்பட்ட அவர்களது மகள் துர்கா, ‘‘எப்படியாவது தம் பெற்றோர்அடைந்த குடும்பத்தின் துன்ப வாழ்வை மாற்றி வறுமையை விரட்டிட’’ தனக்குள் ஒரு வைராக்கியத்தைச் செய்து கொண்டார் மகள் – துர்கா என்ற அந்தப் பெண்.
கல்விதான் நம்மை உயர்த்தும் ஒரே ஏணி. எப்பாடுபட்டேனும் ‘கற்கை நன்றே’ என்ற மொழிக்குச் செயலுருவம் தந்தார் – விடா முயற்சியுடன்!
முன்பெல்லாம் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக் கும், பெண்களுக்கும் கல்வி என்பது எட்டாத ஒன்று. கிட்டாத வாய்ப்பு!
ஆனால் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி, காமராசர் ஆட்சி, திராவிடர் இயக்க தொடர் ஆட்சியில், கல்வி நீரோடை நாடெல்லாம் பாயத் தொடங்கியதால் வாய்ப்புக் கதவுகள் திறக்கத் தொடங்கின.பெண் கல்விக்கே குடும்பத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று, வரவேற்கத்தக்க மாறுதலுக்குச் சமூகம் ஆட்பட்டது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் இடையறாத போரட்டங்களினாலும், கண்காணிப்புகளாலும், திராவிட ஆட்சியில் கல்வியில் உயர்ந்த தமிழ் நாடாகக் காட்சி அளித்து ஒளி வீசுகிறது!
செல்வி துர்கா போன்றவர்களின் உழைப்பும், ஆக்கமும், ஊக்கமும் அவரை இலக்கை எட்டி வெற்றி வாகை சூட வைத்துள்ளது!
தனது தந்தை அடி நிலைப் பணியாளராக இருந்த அதே துறையில் தான் மேலதிகாரியாக நியமனம் பெற்று ஒரு மாறுதலை – குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்படுத்த எண்ணிய உறுதிப்பாடும் (Commitment). அதற்காக காட்டிய ஈடுபாடும் (Involvement) அவரது கனவை – விருப்பத்தை, செயல் மலராகப் பூத்துக் குலுங்கச் செய்துள்ளது!
துர்கா உறுதியுடன் படித்து, பட்டம் பெற்று, போட்டித் தேர்வில் வென்று, திருத்துறைப்பூண்டி நகராட்சியின் ஆணையர் பதவிக்கு தமிழ்நாடு அரசால் நியமனம் பெற்றுப் பொறுப்பேற்றுள்ளது ஒரு நல்ல சமூகத்தின் அமைதிப் புரட்சியாகும்! நம்மைப் போன்ற சமூகநலப் பணியாளர்களுக்குப் பெரும் மகிழ்வைத் தருவதாகும். ‘தகுதி, திறமை’ ஒரு சிலரின் ஏகபோகச் சொத்து என்ற திட்டமிட்ட புரட்டும், பொல்லாங்கும் பொடிபட்டுப் போயுள்ளது இப்போது!
மகளிரின் மன உறுதி, ஆண்களைவிட மிஞ்சும் வகையில் உள்ள ஓர் அம்சம் என்று சொல்லப்படுகையில், இவர் தனது புதிய பொறுப்பை உணர்ச்சி பொங்கும் நிலையில் ஏற்றபோது, தனது தந்தை பட்ட கஷ்டங்களை எண்ணி கண்ணீர் விட்டிருக்கிறார். அது ஒரு வகையில் துன்பத்தின் வெளிப்பாடு என்றாலும், மற்றொரு வகையில் தனது நிலையில் பதவி அடைந்துள்ளதால் ஏற்பட்ட மகிழ்ச்சிக் கண்ணீர் என்பதே பொருத்தம்.
இந்தப் பொறுப்பில் அவர் முதலமைச்சர் போன்ற பெரு மக்களின் வாழ்த்தோடு பதவியேற்றுப் பணி துவக்கியதைப் பார்த்து மகிழ தனது தந்தை இல்லையே என்றுகூறி வருந்தியதும், துயருற்றதும் அவர் கண்களில் மட்டுமல்ல, நம்மைப் போன்ற அவரது சாதனையைப் பாராட்டும் பலரது கண்களிலும் கண்ணீர்த் துளிகளை விழச் செய்துள்ளது!
‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ.’’ பெண் குலத்தின் விலங்கொடித்து வீறு கொள்ளச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பது இப்போது புரிகிறதா?