கொள்கைப் பரப்புச் சிங்கங்களுக்குக் காலமோ, இடங்களோ தடைகளே இல்லை!
எண்ணிக்கையில் சிலர்தான் – ஆனால், அவர்தம்
எண்ணத்தின் எல்லையோ உலகம் முழுவதற்கும்தான்!
கி.வீரமணி
இன்று நூற்றாண்டு காணும் நுழைவு வாயிலில் உள்ள தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் – கசப்பாக, காரமாகவும் சில நேரங்களில் சிலருக்கு – தோன்றுகின்ற அந்த இயக்கம் தனிமனிதரால் தொடங்கப்பட்டது என்றாலும் (1925இல்) அவரது லட்சியத்தால் ஈர்க்கப்பட்டு இணைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் என்ற தன்னலமறுப்பு மெழுகுவத்திகள், அறியாமை, ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கைளைச் சுட்டெரித்து, ஒளி தந்து இன்று மறைந்தும் மறையாதவர்களாக வரலாற்றில் நிறைந்தவர்களாகவே உள்ளார்கள்!
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! – எங்கெங்கும். திண்ணையில், தெருவில், மேடையில், பயணத்தில் ரயிலில், பேருந்தில் – இப்படி ‘குடி செய்த’ அந்த கொள்கைப் பரப்புச் சிங்கங்களுக்கு காலமோ, இடங்களோ தடைகளே இல்லை.
எண்ணிக்கையிலோ சிலர்தான்! ஆனால் அவர்தம் எண்ணத்தின் எல்லையோ உலகம் முழுவதற்கும்தான்!
விசாலப்பார்வை; வெற்றியை இலக்காக்கும் வெஞ்சமர் படையே அது! ஒரு நிகழ்வு இதோ!
இராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள ஒரு சிற்றூர்.
அச்சிற்றூரைக் கற்றூராக்கிட இந்த ஒற்றை நபர் படை, படைத் தலைவரால் அனுப்பி வைக்கப்படுகிறது உள்ளத்தில் போரின் இலக்குடன்!
ஒரு நபர் கடைவீதி நடுவில் ஆதிகால, அக்கால ‘முரசான’ “தமுக்கு ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் ஓசை எழுப்பும் துணைக்கருவிகளாக வைத்து டம், டம்,” என்று ஓசை – எழுப்புகிறார்!
முதலில் மூவர், பிறகு முப்பது பேர், அதற்கப்புறம் 300 பேர் இப்படிக் கூடுகிறார்கள். ‘மெக்காபோன்’ என்ற தகரக் குழாய் உருளைகூட பயன்பாட்டிற்கு வராத அந்த நாள் – காலம் அது!
வாயால் பெரு ஒலி எழுப்புகிறார் ‘தமுக்கடித்தத் அந்தத் தம்பிரான்!’
“பெரியோர்களே, தாய்மார்களே, இளைஞர்களே, சகோதர சகோதரிகளே, அனைத்துப் பெருமக்களே,
இன்று மாலை 6 மணிக்கு (உள்ளூர்) திடலில் சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறும். அதில் சுயமரியாதை இயக்கப் பேச்சாளர் தோழர் பூவாளூர் அ.பொன்னம்பலனார் பேசுவார்.
அனைவரும் வருவீர்களாக! டும்! டும்!! டும்!!!”
அறியாத முகம்; ஊருக்குப் புதிய முகம்.
“ஓகோ இந்த சு.ம.க்காரர்கள் இந்த ஊருக்குள் படையெடுத்துவிட்டனரோ, ஊர் உருப்பட்ட மாதிரிதான், ‘கலியுகம்’. ஹூம் இதெல்லாம் அந்த நாத்திக இராசாமி நாயக்கன் கூட்டம்!
ஊரைக் கெடுக்க உள்ளே நுழைகிறது; போய்த் தடுக்க நாமும் நம்மூர் சாஸ்திரிகளோடு கலந்து ஒரு திட்டம் தீட்டி கூட்டத்தில் கல்லெறிந்து ஓட ஓட விரட்டிடும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தால், தானே ஓடி விடுவார்கள்” அன்று மனதுள் பேசி, கலவரம் கொலை கணக்குப் போடவும், திட்டம் தீட்டவும் தயாராகும் ஒரு கூட்டம்.
அந்த மாலை வந்தது; ஆசாமியும் ஒரு சின்ன ஸ்டூலுடன் வந்து உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பெயர் பொன்னம்பலம். அவரது வேகமும், விவேகமும் கலந்த விறுவிறு நடைப் பேச்சு கேட்டு ஸ்தம்பித்து ‘மெய்மறந்து கேட்கின்றனர்’ கூடிய கூட்டத்தினர்.
‘போட் மெயில்’ என்ற தனுஷ்கோடி – இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் – (அப்போது அதுதான் அதிவேக ரயில்) அதனையே மிஞ்சுவதாக வார்த்தைகள் வேகமாக வந்து விழுகின்றன!
மகுடிக்கு கட்டுப்பட்ட அரவமாக அன்றைய ‘ஆடியன்ஸ்’!
நடுவில் ஒரு சிறு உரையாடல்:
“ஏம்பா இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே; முகம் ஏதோ அறிமுகம். அதுதான் யோசிக்கிறேன். யோவ், இந்த ஊருக்கு இன்னிக்குத்தான் வாராரா, இல்லையா, உம் இப்ப ஞாபகம் வந்துடுச்சி. காலைலே, கடைவீதியில தமுக்கை கழுத்தில் மாட்டிய அதே ஆள் தாம்பா இவர்!
அவரே “பொன்னம்பலம் பேசுகிறார்” என்று சுய விளம்பரத்தை தானே செய்துதான் இப்படி நம்மையெல்லாம் அவரே சேர்த்துள்ளார்.
என்னே, வேடிக்கை!”
இப்படி ஒரு புறம்!
இன்னொரு புறம், கல்வீச்சு! தூரத்திலிருந்துத் தொடங்கி அடைமழையான… பேச்சு நிற்க, ஜனங்கள் ஓடி ஒதுங்கிப் போய் கேட்டு, “அந்த ஆள் கேக்குற கேள்வியிலும் ஒரு நியாயம்… இருக்குதானே!”
“கல்லுசாமி உண்மையாகவே சாப்பிடறதாக இருந்தா நம்ம ஆள் படைப்பானா? குருக்கள், அர்ச்சகர், அய்யர் வீட்டில்தானே ஆராதனையின் பலாபலன்.
தேங்காய் உடைச்சவனுக்குப் பாதி மூடிதானே மிச்சம். நம்ம காசுப் போச்சே!”
“இப்படி சிந்திக்க வைக்கும் சீரிய பிரச்சாரம்!
இந்த சுயமரியாதை ஏவுகணைகளை ஏவியவர் அவர்களின் தலைவர்; ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அனுப்பிய இவர்களுக்கு ஏது பணம்?”
இளைஞர்களே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அடுத்த கட்டுரைக்காக காத்திருங்கள்!