சென்னை ஆக.14 தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடி முதலீட்டில் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி தொடர்பான 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்துக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (13.8.2024) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், அரசுத் திட்டங்கள், துறைகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். வரும் 19 ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்தும் முதலமைச்சர் பேசியதாக தெரிகிறது. அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி. ராஜா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மின்கலன், மின்னணு பொருட்கள், வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் வந்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் செம்கார்ப் நிறுவனம் சார்பில் ரூ.21,340 கோடி முதலீட்டில் 1,114 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம், காஞ்சிபுரத்தில் மதர்சன் எலெக்ட்ரானிக்ஸ் சார்பில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம், ஈரோட்டில் மில்கிமிஸ்ட் நிறுவனம் சார்பில் ரூ.1,777 கோடியில் 2,025 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் லோகன் கிரீன்டெக் நிறுவனம் சார்பில் ரூ.1,597 கோடியில் 715 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகள்.
உலகளாவிய திறன் மய்யங்களின் விரிவாக்கத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ், அஸ்ட்ராஜெனிகா ஆகிய 2 நிறுவனங்கள் தங்கள் திறன் மய்யங்களை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக, சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த வல்லம் வடகால் பகுதியில் ரூ.706.05 கோடியில் பாக்ஸ்கான் நிறுவன பணியாளர்கள் தங்குவதற்காக, 18,720 படுக்கைகள் கொண்ட கட்டடத்தை முதலமைச்சர் வரும் 17 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
பசுமை எரிசக்தி கொள்கைகள்
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்கு முன்பு 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிறுவுதிறனை அடைய வேண்டும் என முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்படி, எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டம், தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் புதுப்பித்தல் – ஆயுள் நீட்டிப்பு ஆகிய 3 கொள்கைகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் நீரேற்று புனல் மின் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுவதால் தனியார் பங்களிப்புடன் செய்வது அவசியமாகிறது. இதற்கு பல்வேறு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு, அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கான நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு புனல் மின் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பு இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்து, சொந்த தேவைக்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 10 சதவீதம் மின்வாரியத்துக்கு இலவசமாக வழங்கப் படும்.
தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நிறுவப்பட்டு 40-50 ஆண்டுகள் ஆவதால், உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது. அவற்றை புதுப்பித்தால் மின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.