சென்னை, ஆக.13- புதுமை இலக்கியத் தென்றல் 1002ஆவது நிகழ்வாக பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு சிறப்புச் சொற்பொழிவு சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (12.8.2024) மாலை நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் தலைமையேற்று சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் அ.இறையன் இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும், 12.8.2005 அன்று அவர் மறைவின்போது, அமெரிக்காவிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நேரில் அ.இறையன் உடலுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வையும், 11.9.2005 அன்று நடைபெற்ற அ.இறையன் படத்திறப்பில் தமிழர் தலைவர் ஆசியர் அவர்கள் பங்கேற்று உரையாற்றியதையும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
பெரியார் பேருரையாளர் அ.இறையன் குறித்த நினைவலைகளை உணர்வுபூர்வமாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எது இலக்கியம்? யார் இலக்கியவாதி? தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்குப்பிறகே நெல்லுக்கு இரைத்த நீர் ‘தர்ப்பைப் புல்‘லுக்கும் பாய்ந்ததைப்போல் சமஸ்கிருதத்துக்கும் செம்மொழி அந்தஸ்து அளிக்கப் பட்டது. இலக்கியம் என்பது தமிழ்ச்சொல்லே என்று புரட்சிக்கவிஞர் வரையறுத்துக் கூறியுள்ளதை, வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?, கேட்டலும் கிளத்தலும் புத்தகங்களிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக்காட்டினார். சோமலெ எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் புத்தகத்திலிருந்தும் மொழியியல், எழுத்து, அச்சு பரிணாமங்கள், இலக்கிய வகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சுவைபட எடுத்துக்கூறினார்.
‘நல்லதோர் வீணை செய்தே’ எனும் பாரதிக்கும், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா? எனும் புரட்சிக்கவிஞர் வரிகளுடன் காதல் இலக்கியத்தில் சித்திரச்சோலைகளே பாடலில் உழைப்பாளி தன் வியர்வையை சிந்தி சோலைகளை வளர்த்ததை புரட்சிக்கவிஞர் தந்தை பெரியார் வழியில் பண்பாட்டு, கொள்கைப்பார்வையுடன் கூறி உள்ளதை சுட்டிக்காட்டினார் தமிழர் தலைவர்.
சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார் தொண்டால் பயன்பெறாத ஒரு குடும்பம் உண்டா? என்று திரிபுவாதிகளை நோக்கி அறைகூவலாக கேள்வியைத் தொடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1954-56 களில் தந்தை பெரியார் மீதான நீதிமன்ற அவதூறு வழக்கில் தந்தைபெரியார் அளித்த வாக்குமூலம், நீதி கெட்டது யாரால்? என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளதையும், 1933 நாகம்மையார் மறைவுற்ற நிலையில், தந்தைபெரியார் வெளியிட்ட இரங்கல் இலக்கியம் குறித்தும் குறிப்பிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இவை இலக்கியம் இல்லை என்றால் எது இலக்கியம் என்றும், தந்தை பெரியார் இலக்கியவாதி இல்லையென்றால் வேறு யார் இலக்கியவாதி என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை ஆய்வுரையாக அமைந்தது. மேலும், இக்கூட்டத்தின் தொடர்ச்சியில் ஒரு நாளில் மீண்டும் உரையாற்ற உள்ளதையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் அதன் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களுக்கு புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் மு.ரா.மாணிக்கம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் இணைப்புரை வழங்கினார்.
நிகழ்வில், இறையனார் குடும்ப சார்பாக பெரியார் உலக நிதியாக தமிழர் தலைவரிடம் ரூ.5,000 வழங்கப்பட்டது. மாதந்தோறும் பெரியார் மாணாக்கன் குடும்பத்தினர் வழங்கும் நன்கொடைகள் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மதிமுக இளவழகன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் கி. தளபதிராஜ், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், வி.சி.வில்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புசெல்வன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, வட சென்னை மாவட்டக் காப்பாளர் கி. இராமலிங்கம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர்கள் மற்றும் இறையன் குடும்பத்தினர் கண்ணப்பன்-பண்பொளி, பெரியார் மாணாக்கன்-பூவை செல்வி, இசையின்பன்-பசும்பொன், பகலவன்-சீர்த்தி, செ.பெ. தொண்டறம், பெரியார் பிஞ்சு மகிழன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் இறைவி நன்றி கூறினார்.