நாகர்கோவில். ஆக. 13- ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மேலும் 2,596 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட இருக்கிறது.
கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை உருவாக்க இயலும். இதனால், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக் கப்பட்ட திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் ஆகும்.
12ஆம் வகுப்பு முடிந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிறது. மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
இதன்படி மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கலை, அறிவியல், தொழில்முறை படிப் புகள், துணை மருத்துவம், டிப்ளமா, அய்டிஅய், இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, அப்படிப் புக்கான உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
குமரி மாவட்டத்தில் 164 கல்வி நிறுவனங்களில் இருந்து 3109 மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
இதில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் 332 பேருக்கும், 2ஆம் கட்டமாக 1,219 பேருக்கும், 3ஆம் கட்ட மாக 1558 பேருக்கும் இந்த திட்டத்தில் உதவித்தொகை வழங்கப் படுகிறது.
நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பயின்ற தகுதியான மாணவிகள் 2,776 பேர் ஆவர்.
இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் 1,680 பேர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6 முதல் 12 வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் 916 பேர் ஆவர்.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 2,596 பேர் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு விரைவில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், குழந்தைத் திரும ணத்தை தடுத்தல். ஜாதி நிலைமை மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவிக ளுக்கு நிதி உதவி. பெண் குழந் தைகள் பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல். பெண்கள் தங்கள் விருப்பப்படி உயர் படிப்பைத் தொடர ஊக்கப்படுத்துதல். உயர்கல்வி மூலம் அனைத்து துறைகளிலும் பெண்களின் திறமை மற்றும் பங்களிப்பை ஊக்குவித்தல். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல். அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு வசதி செய்தல் ஆகியவை புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கமாகும்.
கட்டாயக்கல்வி திட்ட மாணவிகளும் பயன்பெறலாம்
அரசுப் பள்ளிகள் என்பது ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளி கள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங் குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்.
மறுசீரமைக்கப்பட்ட வலைதளம்
புதுமைப் பெண் திட்டத்திற்கென புதிய மறு சீரமைக்கப்பட்ட வலைதளம் https://www.pudhumaipenn.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தாங்கள் உயர் கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும்.
ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இக்குழு வானது மாதந்தோறும் கூட் டப்பட்டு இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கே உதவித்தொகை
* ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
* கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
* அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.
* வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும்.
* உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.