படித்துக் கொண்டே வேலை செய்யலாம் என்பது போல தான் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டலாம் என்கிற திட்டத்துடன் வந்திருக்கிறது திருச்சியில் இருக்கிற ஊர் கேப்ஸ் நிறுவனம். கல்லூரிப் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என பலரும் தற்போது இந்த நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.
அதிலும் இன்னொரு சிறப்பம்சம் இந்த ஊர் ஆட்டோக்கள் முழுவதும் இ ஆட்டோக்கள். ‘‘சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்தான் இருக்க வேண்டும் என இந்த இ ஆட்டோக்களை வைத்து தொடங்கியுள்ளோம்’’ என்கிறார் ஊர் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மரிய ஆண்டனி.
‘‘நம் நாட்டின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மக்களும் சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களை வாங்குவதால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. நினைத்த நேரத்துக்கு போக முடிவதில்லை. மறுபக்கம் பெட்ரோல் விலை அதிகரித்ததால் மக்கள் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமான வாகனங்களை பயன்படுத்துவதால், கார்பன் டை ஆக்சைடு புகையும் அதிக அளவில் வெளியேறினதால், வெப்பம் ஏற்படுகிறது.
தற்போது புவி வெப்பமயமாதல் பிரச்சினையும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இதற்கான மாற்று பேட்டரி வாகனங்கள். பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் ஆட்டோவினை இயக்குவார்கள். பகுதி நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கும் வேலை அளிக்க திட்டமிட்டோம். வெளிநாடுகளில் கல்லூரியில் படிப்பவர்கள் பகுதி நேர வேலை செய்வார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களின் அன்றாட செலவிற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அதே திட்டத்தினை இதில் செயல்படுத்தி இருக்கிறோம். கல்லூரி மாணவ, மாணவி கள் பகுதி நேரமாகவும் எங்களின் ஆட்டோ வினை ஓட்டலாம்.
தற்போது 13 பெண்கள் எங்க நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். சுற்றுச்சூழலை கெடுக்காத வகையிலும், எங்களிடம் வேலை செய்பவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்கிறார் மரிய ஆண்டனி.