ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராக எட்டுச் சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதற்குத் தயார் என அறிவிக்கப்பட்டது.ஓட்டம் தொடங்குவதற்கான விசில் அடிக்கப்பட்டதும் எட்டுச் சிறுமிகளும் ஓட ஆரம்பித்தார்கள். 50 அடி தூரம் ஓடியதும் ஒரு சிறுமி திடீரென கீழே விழுந்து விட்டாள்.முன்னால் ஓடியவர்களுக்குப் பின்னே விழுந்தவளின் அழுகைச் சத்தம் கேட்கிறது.கீழே விழுந்தவள் வலியால் அழுகின்றாள்.முன்னோக்கி ஓடிய 7 சிறுமிகளும் மீண்டும் பின்னோக்கி வந்து நிற்கிறார்கள்.அவர்களில் ஒருத்தி கீழே விழுந்தவளைத் தூக்குகிறாள்.அவளது அழுகையைத் துடைத்து விடுகின்றாள்.அவரது கன்னத்தில் அன்போடு முத்தம் கொடுக்கின்றாள்.மற்ற ஒருவர் அவரை அன்போடு தட்டிக் கொடுக்கின்றார்.அந்த நேரத்தில் அழுது கொண்டு இருந்தவளின் அழுகையின் வேகம் குறைகின்றது.அவளது வலியும் குறைந்ததாக உணர்கிறார்.போட்டியை நடத்துபவர்களும், சுற்றி இருந்த மக்களும் அமைதியாக அங்கே மைதானத்தில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அந்த எட்டுச் சிறுமிகளும் ஒருவர் ஒருவர் கையை பிடித்துக் கொண்டார்கள்.மெதுவாக நடக்கிறார்கள்.காரணம் கீழே விழுந்தவளால் ஓட முடியாது. வேகமாக நடக்கவும் முடியாது.
மெதுவாக நடந்த எட்டு பேரும் அடுத்த இலக்கினை, அதாவது ஓடி அடைய வேண்டிய தூரத்தை ஒன்றாக அடைந்தார்கள்.போட்டிக்கு வந்திருந்த நடுவர்களுக்கு ஆச்சரியம்! போட்டியை நடத்தியவர்களுக்கும் இதுபுதுமையாக இருந்தது.அங்கே பார்வையாளராக அமர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் மிக பலமாக கரவொலி எழுப்பி இந்த எட்டுப் பேரையும் வாழ்த்தினார்கள்.அந்த எட்டுச் சிறுமிகளுமே பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு அய்தராபாத்தில் உண்மையிலே நடைபெற்றதாகும். இங்கு போட்டியில் கலந்து கொண்ட எட்டுச் சிறுமிகளும் மனநலம் பாதிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய சிறுமிகள்.ஒரு சிறுமி பாதிக்கப்பட்டதும் அவளைத் தேற்றியதோடு,அவளும் இங்கே பரிசைப் பெற வேண்டும் என்று அவர்களாகவே முடிவெடுத்து, ஒன்றாக நடத்திச் சென்று இலக்கினை அடைந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியை நடத்தியவர்கள் தேசிய மனநல மய்யத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கும்,அங்கே பார்வையாளராக வந்த செய்தியாளருக்கும்,செய்தியைக் கேட்ட பலருக்கும் இந்த மனநலம் குன்றிய சிறுமிகளின் செயல் மனிதாபிமானத்தைப் பறைசாற்றியது.இது போன்ற மனிதாபிமான மகத்தான செயல்களை இந்தஉலகத்தில் ஒருசிலர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.