சோழர், பாண்டியர் ஆட்சியில் தவறு செய்த ஆண், பெண்ணுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது?
அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச் சாலைகளும், கடும் தண்டனைகளும் இருந்து வரு கின்றன.
சங்க காலத்திலும், அதற்குப் பின்பும் சிறை தண்ட னைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்து கின்றன.
பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்களிலும் சிறைகளைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
சங்க இலக்கியங்களில் சிறைச்சாலை
சிறைச்சாலை என்பது இலக்கியங்களில் சிறைக் களம், சிறைக் காவல், சிறைக் கூடம், சிறைப் பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. தவறு செய்யும் குற்றவாளியைக் கைது செய்வதற்கு ‘சிறை கொள்ளுதல், சிறை செய்தல், சிறை பிடித்தல்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தண்டனைக்கு உள்ளான கைதி, சிறைச்சாலையில் அனுபவிக்கும் துன்பங்களை ‘சிறை நோய்’ என்ற சொற்களின் மூலம் மணிமேகலை குறிப்பிடுகிறது.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழ மன்னரான செங்கணானோடு போரிட்டுத் தோல்வியடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டதை புறநானூற்று பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்தபோது, அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்கிறார். அப்போது சிறைக் காவலர் அந்தத் தண்ணீரை காலம் தாழ்த்திக் கொடுக்கிறார். அதைக் குடிக்க மறுக்கும் இரும்பொறை “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என்ற பாடலைப் பாடிவிட்டு உயிரிழந்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது. அந்தப் பாடல் புறநானூறில் 74ஆவது பாடலாக இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் மன்னராட்சிக் காலத்தில் சிறைகள் எப்படியிருந்தன என்பது குறித்த தகவல்கள், கல்வெட்டுகள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சுமார் 25 கல்வெட்டுகளில் சிறைச்சாலைகள் பற்றிய செய்திகள் வந்துள்ளதாகக் குறிப்பிடும் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணைக் கண்காணிப்பாளருமான க. பன்னீர்செல்வம், அந்தக் கல்வெட்டுகளில் இருந்து அக்காலகட்டத்தில் விதிக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விவரங்களும் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.
இந்தக் கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன. உதாரணமாக, கோவில் நகைகளைத் திருடியதால் இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோவில் நகையைத் திருடிய அர்ச்சகரின் மனைவிக்குத் தண்டனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் கிராமத்தில் இருக்கிறது காமேஸ்வரர் ஆலயம். இதுவொரு சிவன் கோவில். இந்தக் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் தெற்குச் சுவரில் இரண்டாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியனின் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1289) கல்வெட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் “தேவாண்டார் சானி உள்ளிட் டார் பக்கலே களவாக நிரப்பி இவளையும் இவள் மருமகளையும் சிறையிலே வைத்து” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இது, இரண்டு பெண்கள் திருக்கோவிலில் வைத் திருந்த ஆபரணங்களைத் திருடியதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை விவரிப்பதாகச் சொல்கிறார் பன்னீர்செல்வம்.
“அதாவது, அந்தக் கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் ஒருவரின் மனைவியான தேவாண்டான் சானி என்பவரும், அவருடைய மருமகளும் கோவில் நகைகளைத் திருடியுள்ளனர். இவர்களை சபையோர் திருமண்டபத்தில் கூடியிருந்து விசாரித்ததில் உண்மையாகவே இவர்கள் திருக்கோவிலின் நகைகளைத் திருடியவர்கள் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சிறை தண்டனையும் விதித்துள்ளனர்.
மேலும் அவர்களுடைய பணி செய்யும் உரிமை யையும், அவர்களது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் பணி உரிமைகளையும் விட்டுக்கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அக்காலத்தில் குற்றம் செய்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் செய்த தவறுக்கு ஏற்ப சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மிகச்சிறந்த உதாரணம்” என்கிறார் பன்னீர்செல்வம்.
ஜாமீன்தாரர்களின் பொறுப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் சிறைச்சாலை பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டில், திருவரங்க நாராயணன் சிறீ கிருஷ்ணன் ஆழ்வார் பண்டாரத்தில் (கருவூலம்) 940 காசுகளைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக அவரிடம் ராஜேந்திர சோழ மூவேந்த வேளார் கணக்கு கேட்டுள்ளார். அவர் 600 கலம் நெல் கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தாம் ஒப்புக்கொண்டபடி 940 காசையும் 600 கலம் நெல்லையும் தராததால், சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் ஆழப்பிறந்தான் என்ற ஊரில் அமைந்துள்ள பூமீஸ்வரர் திருக்கோவிலின் கர்ப்பகிரகத்தின் வடக்கு சுவரில் கி.பி. 1480ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் சிறைச்சாலை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது .
அதில், “அறந்தாங்கிப்பற்று, விளை மாணிக்கப்பற்று, அரையகுளப்பற்று நாட்டவர்கள், பிள்ளைபேறும் ஒத்துக்கொண்டு செய்து கொடுத்துள்ள ஒப்பந்தத்தில் தேவராயர் தொண்டைமானார் நாளில் நடந்து வருகிற முறைப்படி நடத்திக் கொள்ளவும், ஒருவர் குற்றம் செய்தால் அவரை ராஜ குற்றம் கேட்கும் அளவில் அவரது உற்பத்தியில் ஒரு பாதியை பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாக இடவும், பிரிதொரு பாதிக்கு அவரைச் சிறையிட்டு வாங்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது பேரில் நியமித்த முதலைச் செலுத்துவதற்கு முடியாமல் ஓடிப் போனால் அவருக்குப் பிணை நின்றோர் (ஜாமீன்தாரர்) உத்தரவாதம் சொல்லக் கடமைப்பட வேண்டும்” என்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.
சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்கள் மட்டுமல்லாமல் பிணை அளித்தவர்களுக் கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் க. பன்னீர்செல்வம்
– பிபிசி தமிழ் இணையம், 11.8.2024