மகிழ்வோடு வாழ வழிகாட்டும் மகளிர் குழு

viduthalai
3 Min Read

‘‘இந்தப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தது கிடையாது. வெளியுலகம் தெரியாது. இப்போது சொந்தமாக சிறு தொழில் செய்கிறார்கள். சமூக சேவையில் ஈடுபடுகிறார்கள்’’ என்கிறார் கள – இயக்குநரான சரவணன்.
இவர் அமைப்பு மூலமாக பெண்களுக்கான மகளிர் குழுவினை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ‘‘ஒவ்வொரு ஏரியாவிலும் அங்குள்ள பெண்கள் இணைந்து மகளிர் குழு அமைத்து நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களால் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

எங்கள் அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலத்திட்டத்திற்காக இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சீர் காழியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதில் பல இளம் பெண்கள் கலந்து கொண்டார்கள். அவர்களை சந்தித்த போது இல்லத்தரசிகளாக இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அறிந்தோம்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாமிற்கு வந்திருந்த இரண்டு பெண்களிடம் மகளிர் குழு ஒன்றை அமைப்பது குறித்து பேசினோம். முதலில் தயங்கியவர்கள், இதனால் ஏற்படும் நன்மை குறித்து விவரித்ததும் சிந்திக்க தொடங்கினார்கள். அவர்களின் அந்த சிந்தனைதான் இப்போது அவர்களுக்கென ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத் துள்ளது’’ என்றவரை தொடர்ந்து மகளிர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வினோலியா கூறியது:

‘‘என் கணவர் கார்பென்டர் வேலை பார்க்கிறார். திருமணமாகிதான் நான் இந்த ஊருக்கு வந்தேன். எனக்குள் எப்போதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்போதுதான் எஸ்.எஸ்.டி அமைப்பினர் மகளிர் குழு அமைப்பது குறித்து பேசினாங்க. ஒரு குழு அமைப்பதால், எங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அவர்கள் சொன்னார்கள். இதனால் என்னால் முடிந்த உதவியை என் குடும்பத்திற்கு செய்யலாம் என்று தோன்றியது.
அதுவரை பக்கத்து வீட்டில் உள்ளவர் களிடம் அதிகம் பேசாத நான் அவர்களை சந்தித்து இது குறித்து பேசினேன். அப்படி 12 பேராக இணைந்தோம். குழுவினை எவ்வாறு அமைக்க வேண்டும். அதில் கணக்கு வழக்குகளை எப்படி எழுத வேண்டும். கடன் பெறுவது, அதனை எத்தனை தவணையில் திருப்பி செலுத்த வேண்டும். குழுவில் ஒரு தொகையை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நாங்கள் வெளியே யாரிடமும் கடன் வாங்குவதில்லை. மேலும் எங்களின் கணவரின் தொழிலுக்கும் உதவியாக இருக்கிறோம். சிலர் தனியாகவும் தொழில் செய்கிறார்கள்’’ என்றார்.

‘‘நாங்கள் பெரும்பாலும் எந்த வேலைக்கும் போனதில்லை. கணவர் கொண்டுவரும் சம்பாத்தியத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். சில சமயம் வீட்டுத் தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால் அதை திருப்பி தரவே ரொம்ப சிரமப்படுவோம். இப்போது நாங்கள் வெளி கடன் வாங்குவதை நிறுத்திவிட்டோம்’’ என்றார் மற்றுமொறு உறுப்பினரான சிவரஞ்சனி.

இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களும் சொந்தமாகவோ அல்லது தன் கணவர் செய்யும் தொழிலுக்கு உதவி செய்தோ வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஊர் மற்றும் பள்ளிக்கூட வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த சேவையினை செய்கிறார்கள். அதில் பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக இரண்டு எவர்சில்வர் தண்ணீர் டிரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் தெருவில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்த போன போது, அதை சீரமைத்துக் கொடுத்தார்கள்.

மேலும், பள்ளிக் குழுந்தைகளுக்காக ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *