சென்னை, ஆக. 13- சென்னை –- தாம்பரம் ரயில் நிலை யத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23 முதல் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அங்கு மேம்பாட்டு பணிகள் மற்றும் நடைமேடைகள் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் ஆகஸ்ட் 14 வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மேலும் 3 நாட்களுக்கு நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை 3 நாட்கள் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்புப் பணிகள் காரணமாக வருகிற 15, 16, 17 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது.
இதற்கு மாற்றாக விரைவு ரயில்கள் அனைத்தும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக எழும்பூர் நோக்கி வரும் அனைத்து விரைவு ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது. அதற்கு பதிலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம் வழியாக இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொடைரோடு அருகே
17ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
நிலக்கோட்டை, ஆக.13 கொடைரோடு அருகே விவசாய நிலத்தில் உழுத போது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே பொம் மனம்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி.
விவசாயி. இவரது நிலத்தில் நேற்று மானாவாரி பயிர் செய்ய உழுதபோது நடுகல் ஒன்று தென்பட்டது. தகவ லறிந்து வந்த வரலாற்று பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அடங்கிய குழுவினர் அந்த நடுகல்லை ஆய்வு செய்தனர். ‘‘இந்த நடுகல்லில் 2.5 அடி உயரம், 2 அகலத்தில் இரண்டு போர் வீரர்கள் சிற்பம் உள்ளது.
ஒருவர் துப்பாக்கியுடனும் மற்றொருவர் கூர்வாளுடனும் இருப்பதால், இது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம். தலையில் கொண்டையுடனும், கையில் துப்பாக்கியும் இருப்பதால் முதலாம் நாயக்கர் கால சிற்பங்களாக இருக்கலாம். இந்த சிற்பம் போர் வீரர்களின் அடையாளமாக வைக்கப்பட்டு குலதெய்வமாக வழிபட்டு வந்திருக்கலாம்’’ என்றனர்.
வேர்களைத் தேடி
திட்டத்தின் கீழ்
அயலக தமிழ் மாணவர்கள் கீழடியை பார்த்து பரவசம்
திருப்புவனம், ஆக.13 பண்டைய தமிழர்களின் கட்டடம், சிற்பக் கலை, பாரம்பரிய கலாசார முறைகளை, இளைய தலைமுறை, மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்வதற்காக வேர்களைத்தேடி என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அயலக தமிழ் மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், இந்தோனேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 115 தமிழ் மாணவர்கள் நேற்று (12.8.2024) மாலை, சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு வருகை தந்தனர். அங்கு நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு ஆச்சரியப்பட்டனர். இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த தமிழர்களின் தொன்மை மற்றும் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.
இதுகுறித்து சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் முடிவில் அயலகத்திலிருந்து பங்குபெறும் இளைஞர்கள், அவர்களது நாடுகளுக்கான தமிழ்நாட்டின் கலாச்சார தூதர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்’’ என்றார். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வேங்கடசுப்பிரமணியன், உதவி சுற்றுலா அலுவலர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.